விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை- வீட்டு வேலையாட்களிடம் விசாரணை
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் காணாமல் போன வழக்கில் 9 ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் யேசுதாஸ். பிரபல திரைப்பட பாடகரான இவர் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா வீட்டின் லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்க்கும் போது 60சவரன் நகைகள் காணாமல் போயுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தர்ஷனா புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக விஜய் யேசுதாஸ் வீட்டில் வேலை பார்த்த 9 ஊழியர்களிடம் நகைகள் காணாமல் போனது குறித்து தனிதனியாக போலீசார் விசாரணை மேற்கொண்டு விவரங்களை சேகரித்தனர். இந்த விசாரணையில் வீட்டில் வேலைபார்த்த இரண்டு ஊழியர்கள் பீகார் மற்றும் நேபாளம் மாநிலத்திற்கு பிப்ரவரி மாதம் இறுதியில் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. பீகார் மற்றும் நேபாளத்திற்கு சென்ற இரு ஊழியர்களிடம் விசாரணை நடத்த போலீசார் சென்னைக்கு அழைத்துள்ளனர். மேலும் நகைகள் காணாமல் போயி ஒரு மாதத்திற்கு பிற்கு விஜய் யேசுதாஸின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதால் அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.