ஆலந்தூரில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த சென்டர் மீடியேட்டரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தாா்.சென்னையை அடுத்த தாம்பரத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் இரண்டு இளைஞர்கள் வந்தனர். ஆலந்தூர் ஆசர்கானா அருகே நள்ளிரவு திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியேட்டரில் மோதியது. இதில் 2 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்ததில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் வாகனம் ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொரு நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பரங்கிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அந்த இளைஞா் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஜெயின் நகரை சேர்ந்த கிஷோர்(18). இவரது நண்பர் யோனேஷ்(18) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்த போது விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியானார். யோனேஷ் படுகாயத்துடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கிஷோர் பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர உள்ளார் என தெரியவந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் பார்த்து விட்டு பைக்கில் வேகமாக வந்த பொழுது இதே இடத்தில் சென்டர் மீடியேட்டரில் மோதி உயிரிழந்த நிலையில், போலீசார் வேகத்தை குறைப்பதற்காக பேரிகார்டுகள் அந்த இடத்தில் வைத்தனர் இதனால் விபத்தை ஏற்படாமல் தடுக்கப்பட்டது. தற்பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருமங்கலம் பள்ளி சாலையில் இருந்து பார்க் சாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் இரண்டு கல்லூரி மாணவா்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த காா் மோதியதில் அருகில் உள்ள பள்ளி சுற்றில் மோதி பைக்கில் சென்றவர்கள் விபத்துக்குள்ளானார்கள். அதில் ஒரு மாணவன் உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழாதிருக்க இளைஞா்கள் தங்களது வேகத்தினை குறைத்து, பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.