spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!

பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!

-

- Advertisement -

ஊர்சுற்றி

பாஜக பாதையில் எடப்பாடி: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி பாத்திரம் என்னவாகும்?பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி

“கோயிலைக் கண்டாலே (திமுகவுக்கு) உறுத்துகிறது: கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவதை மக்கள் சதிச் செயலாகப் பார்க்கிறார்கள்” என்று கோவையில் தனது பரப்புரைப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலையை எழுப்பியுள்ளது.

பாஜகவின் தேர்தல் கூட்டணிக் கட்சி என்ற நிலையைத் தாண்டி பாஜகவின் கொள்கைக் கூட்டாளியாக அதிமுக வீழ்ச்சி அடைந்து விட்டது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. அதிமுகவின் இந்த வீழ்ச்சியை திமுக அம்பலப்படுத்திப் பேசுகிறது. அப்படிச் செய்வது நிச்சயமாக இந்தத் தேர்தலில் திமுகவுக்குப் பலன் அளிக்கும்.

we-r-hiring

இது அதிமுகவுக்குப் புரிகிறதோ இல்லையோ, நிச்சயம் பாஜகவுக்கு புரியும். இப்படி அதிமுகவில் மிச்சம் மீதி இருக்கும் திராவிடக் கட்சி என்ற பண்பை சிதைப்பதன் வாயிலாகவே, தான் விழுங்கத் தோதான கட்சியாக அதிமுகவை மாற்ற முடியும் என்ற தெளிவு பாஜகவுக்கு இருக்கிறது, அதைப்போல 2026ல் ஆட்சியைப் பிடிக்கப்போவதாக பாஜக ஒருபுறம் பசப்பிக்கொண்டிருந்தாலும், ஒரே ஆண்டில் இங்கே ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று அது கனவு காண்பதாகவோ, அவசரப்படுவதாகவோ தெரியவில்லை.

பாஜகவின் இருமுனை உத்தி

தமிழ்நாட்டின் சமூக, அரசியல், அறிவுத் தளங்களில் வேரூன்றியுள்ள திராவிட இயக்க கருத்தியல் வேர்களை ஆர்.எஸ்.எஸ்.சின் பரிவார அமைப்புகள், அதன் ஆதரவுபெற்ற சாதி அமைப்புகள், கூலிக்குழுக்கள் ஆகிய வற்றின் மூலமாக மெல்ல மெல்ல அறுப்பது, இளைஞர்களை அரசியல் நீக்கம் செய்வது, மறுபுறம் அரசியல் தளத்தில் அதிமுகவை சிதைத்து, விழுங்கி முதன்மை எதிர்க்கட்சி என்ற பாத்திரத்தை நோக்கி நகர்வது, என்ற இருதுருவ அணுகுமுறையில் அது வேலை செய்வதாகவே தோன்றுகிறது.

இந்நிலையில், ஒரு தேர்ந்த சங்கியின் சொற்களில் எடப்பாடி பேசத் தொடங்கியிருப்பது, வெறும் அறியாமை அல்ல. இதன் பின்னாலுள்ள உத்திகளைக் கவனிக்கவேண்டும்.

எடப்பாடி பேச்சின் பின்னால் உள்ள உத்திகள் என்ன?

தங்களுக்கு மதச்சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிந்த நிலையில், வட மாநிலங்களில் செயல்படுவதைப்போல சிறுபான்மை பெரும்பான்மை என்ற இருமையைக் கட்டமைத்து தமிழ்நாட்டின் அரசியலை மத அடிப்படையில் இரு துருவமாக்குவது. தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவுதூரம் அரசியல் அறியாத மூர்க்கர்களாக மாறிவிடவில்லை என்பதால், இப்போதைக்கு குறைந்தபட்சம் இந்தத் தேர்தலில் இந்த உத்தி எடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை.

அப்படி ஒரு நீண்டகால உத்தியின் அடிப்படையில், இந்தத் தேர்தலை தியாகம் செய்யும் நோக்கம் பாஜகவுக்கு இருந்தால் புரிந்து கொள்ளலாம். அதிமுக அப்படி இந்தத் தேர்தலைத் தியாகம் செய்துவிட்டால், அதன் இருப்பே கேள்விக்குள்ளாகிவிடுமே. அப்படி இருக்கும்போது எடப்பாடி இந்த விளையாட்டுக்குள் ஏன் இறங்கவேண்டும்? இப்படி ஒரு சந்தேகம் எல்லோருக்கும் எழும். இதைப் புரிந்துகொள்வதற்கு, வேறொரு இடத்துக்குப் போய் வருவோம்.

எடப்பாடியின் வாயில் பாஜகவின் சொற்கள்

பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!

கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சா்மா கேட்டை உரிய நேரத்தில் மூடாமல் விட்டு, பள்ளி வேன்மீது ரயில் மோதி மூன்று சிறுவர்கள் இறந்துவிட்டார்கள். முற்றிலும் ஒன்றிய அரசுத் துறையின் அலட்சியத்தால் நடந்த இந்த விபத்துக்கு தமிழ்நாட்டு அரசை, திமுகவை குற்றம்சாட்டி இரண்டு அறிக்கைகள் ஒரே தேதியில் எக்ஸ் தளத்தில் வெளியாகின்றன. மாலை 6.44 மணிக்கு பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி அப்படியே வரிக்கு வரி, இரவு 8.28 மணிக்கு எடப்பாடி பழனி சாமி வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இதை எழுத்தாளர் பாரதி தம்பி சமூக வலைத்தளத்தில் அம்பலப்படுத்தினார். அதாவது பாஜக அறிக்கையை, அப்படியே பிரதியெடுத்து தனது அறிக்கையாக வெளியிடுகிறார் எடப்பாடி.

அதிமுகவும் பாஜகவும், ஒரே பொருள் குறித்து, ஒரே தொனியில் விமர்சித்தோ. கண்டித்தோ வெவ்வேறு விதமாக அறிக்கை விடுவது வேறு, பாஜகவின் அறிக்கையை அப்படியே வரிக்குவரி அதிமுக பிரதியெடுத்து வெளியிடுவது வேறு. சங்கப் பரிவாரங்களில் உள்ள பாஜகவின் இரண்டு கூட்டாளி அமைப்புகள்கூட இப்படி பிரதி எடுத்து அறிக்கை விடுவது நடக்காது.

எனவே, எடப்பாடி விரும்பி இப்படிச் செய்கிறாரா இல்லை விரும்பாமல் செய்கிறாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், எடப்பாடியின் பெயரில் வெளியாகிறவை பாஜக அறிக்கை, பாஜக திணித்த சொற்களையே அவரது வாய் பேசுகிறது.

இப்போது. திரும்ப நாம் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வருவோம். இந்தத் தேர்தலில் உதவாது என்றபோதும், கோயில் கல்லூரி விவகாரத்தை எடப்பாடி பேசத் தொடங்கியிருக்கிறார் என்றால், அது அதிமுக என்ற கட்சியின் நலனில் இருந்தல்ல. அவர் இப்போது பாஜகவின் நலனில் இருந்தே பேசுகிறார். அல்லது, பாஜகவின் குரலாகவே பேசுகிறார். இதன் மூலம், திராவிடக் கட்சி ஒன்றின் தலைவர் என்ற பாத்திரத்தை அவர் இழந்துவிட்டார், அல்லது துறந்துவிட்டார்.

டாடி வந்தபின் தந்தைக்கு என்ன வேலை?

தனிப்பட்ட முறையில் அவர் மட்டும்தான் இப்படி வீழ்ந்துவிட்டாரா? அவரது கட்சியான அதிமுக எப்படி இருக்கிறது? ஓரிரு வாரங்களுக்கு முன்பு தொலைக் காட்சி விவாதம் ஒன்றில் அதிமுகவின் சேலம் மணிகண்டனும், யூடியூபர் ஜீவசகாப்தனும் பங்கேற்கிறார்கள். பெரியாரைக் குறிப்பிட வேண்டிய ஓர் இடத்தில் மணிகண்டன், ஈ.வெ.ரா. என்று குறிப்பிடுகிறார். பெரியாரை ஈ.வெ.ரா என்று குறிப்பிடுவது அப்படி ஒன்றும் கருத்தியல் பிழை இல்லைதான். ஆனால், வழக்கமாக, திராவிடக் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். ஈ.வெ.ரா. என்று குறிப்பிடுவது, அவரைப் பெரியார் என்று குறிப்பிடமாட்டோம் என்னும் கொள்கைப் பிரகடனமாகவே நடைமுறையில் இருக்கிறது.

நீங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர். ஆனால், பெரியாரை ஈ.வெ.ரா என்று குறிப்பிடுகிறீர்கள் என்று ஜீவசகாப்தன் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், சேலம் மணிகண்டனோ, “நான் எப்படிப் பேசவேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யாதீர்கள்”என்று உறுதியாகக் கூறிவிட்டு, விவாதம் முழுவதிலும் ஈ.வெ.ரா. என்றே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!

மோடி எங்கள் டாடி’ என்ற குரல் அதிமுகவில் இருந்து வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. டாடியாக மோடி ஆன பிறகு ‘தந்தை பெரியாருக்கு என்ன வேலை?

இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டுக்கு அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் பலரும் சென்றிருந்து ‘சிறப்பித்தது’ மட்டுமல்லாமல், அங்கே, பெரியார், அண்ணா குறித்த கேலி நிறைந்த காணொளி திரையிடப் பட்டபோது ஒரு சிறு எதிர்ப்பையும் காட்டாமல் திரும்பி வந்தார்கள்.

அதிமுகவின் வரலாற்றுப் பாத்திரம்

அதிமுக என்ற கட்சியே எப்போதும் திராவிட இயக்கத்தின் பிம்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் நோக்கங்களுக்கு முரணாக நடந்துகொள்ளும் கட்சி என்ற விமர்சனம் உண்டு. கலைஞர் கருணாநிதிகூட ஒரு முறை நீதியின் எதிர்ச்சொல் அநீதி என்பதைப் போல திமுகவின் எதிர்ச்சொல்தான் அதிமுக என்று கூறியிருக்கிறார். திமுக எதன் பொருட்டெல்லாம் நிற்கிறதோ, அதற்கெல்லாம் எதிரானது அதிமுக என்பதே அவரது விமர்சனத்தின் சாரம்.

இப்படிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது, ஜெயலிதாவின் இறப்பு ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கு முன்புவரை, வடநாட்டு அரசியல் போக்குகள் தமிழ்நாட்டுக்குள் நேரடியாக ஊடுருவ முடியாமல் அதிமுக குறுக்கே நின்று கொண்டுதான் இருந்தது.

பாபர் மசூதி இடிப்புக்கான செங்கல் யாத்திரைக்கு ஆதரவு தந்தவர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் தான் ‘பாப்பாத்தி’ என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். திராவிட இயக்கத்தின் இன்னொரு அணுக்கமான கொள்கை நிலைப்பாடான ஈழ ஆதரவு என்பதில் நேரெதிர் நிலை எடுத்தவர் அவர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து தூக்கிலிடவேண்டும் என்று கொக்கரிக்கும் அளவுக்கு அவரது ஈழ விடுதலை எதிர்ப்பு ஆழமானது.பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!தனது முதல் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் ஆட்களை நியமிப்பதற்கு முழுமையாகத் தடை கொண்டுவந்தார் ஜெயலலிதா. அதற்காக வேலை நியமனத் தடைச்சட்டம் என்ற பெயரில் சட்டமே கொண்டுவந்தார். வேலை நியமனத்தில் சமூக நீதி என்னும் திராவிட இயக்கத்தின் அடித்தளமான கோட்பாட்டை ஆட்டம் காணச் செய்த வேலை இது.

எனவே, அதிமுக கொள்கை ரீதியாக எதிர்நிலைக்குச் செல்வது இப்போது ஒன்றும் புதியதல்ல. அப்படி இருக்கும்போது இப்போது ஏன், எடப்பாடியின் கோயில் கல்லூரிப் பேச்சை ஏன் முக்கிய சரிவாக, ஆபத்தை முன்னறிவிக்கும் செயலாகப் பார்க்கவேண்டியிருக்கிறது? இதற்குத் தீர்வு என்ன?

யாருடைய குதிரை இது?

இன்று தமிழ்நாட்டில் பாஜக பயணிப் பதற்கான குதிரையாக அதிமுக பயன்படுகிறது. ஆனால், தொடங்கப்பட்ட காலத்தில் அது காங்கிரஸ் பயணிப்பதற்கான குதிரையாகவே இருந்துவந்தது. மாநில சுயாட்சி, மொழியுரிமை போன்ற விவகாரங்களில் திராவிட இயக்கத்தின் எதிர்நிலையிலும், சமூகநீதி விவகாரத்தில் கண்டும் காணாமலும் செல்வதாகவுமே காங்கிரஸ் அரசியல் இருந்தது.

திராவிட இயக்கத்தின், பொதுவுடைமை இயக்கத்தின் சோஷலிஸ்ட் இயக்கத்தின் அரசியல் மாற்றாக இருக்கவே காங்கிரஸ் பல மாநிலங்களில் முயன்றது. ஆட்சிக் கலைப்பு, எமர்ஜென்சி போன்ற வழிகளைப் பின்பற்றியது. ஆனால், அவர்களின் கருத்தியல் எதிர் முகாமாக தன்னை அது கட்டமைத்துக்கொள்ளவில்லை. சோஷியலிசம், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவைதான் காங்கிரஸ் அறிவித்துக்கொண்ட கோட்பாடுகள். இந்த மென்போக்கு காங்கிரஸ் அரசியல் சவாரி செய்த குதிரையான அதிமுகவும் பெயரளவில் திராவிடத்தை, அண்ணாவை, புரட்சியை சடங்காகப் பயன்படுத்திக் கொண்டே காங்கிரசுக்கான திராவிட முகமூடியாக செயல்பட முடிந்தது.

காங்கிரசை அதிகார மையத்தில் இருந்து அகற்றி அங்கே முற்போக்கான, சமூகநீதிக்கான ஒரு கூட்டரசை நிறுவும் நோக்கத்தோடு தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி போன்ற முயற்சிகள் நடந்தபோது அதிமுக அவற்றை எதிர்த்தே நின்றது.

காலம் மாறிய காலத்தின் அரசியல்

ஆனால், இந்த நிகழ்ச்சிப் போக்கில் காங்கிரஸ் தனது அடித்தளத்தை இழந்து, மாற்று சக்திகளும் வேர்விட முடியாத நிலை ஏற்பட்டபோது, ஏற்கெனவே எழுச்சி பெற்று வந்த வலதுசாரி இந்து தேசியவாதம் ஓரிரு தடு மாற்றங்களுக்குப் பிறகு ஆட்சியில் உறுதியாகக் காலூன்றியது.

மாற்று சக்திகள் வேர்விடமுடியாத நிலையில், வேரிழந்த காங்கிரசை மீண்டும் வேர்விடச் செய்வதன் வாயிலாகவே, வலது சாரிகளைத் தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தாங்கள் அகற்ற விரும்பிய காங்கிரசுடனே கைகோர்த்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக அவர்கள் வெற்றி பெற்று 10 ஆண்டுகாலம் பாஜகவின் எழுச்சியைத் தள்ளிப் போட்டனர்.

பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!

காங்கிரசை மையப்படுத்தி இயங்கிய இந்திய அரசியல், அங்கிருந்து விலகி சிறிது சிறிதாக நகர்ந்து பாஜக மைய அரசியலாக மாறத் தொடங்கிய காலம்தான் அதிமுகவில் ஜெயலலிதாவின் காலம். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் பாஜக தடுமாறிக் கொண்டிருந்த இந்தக் காலத்தில்தான், ஜெயலலிதாவும் அதிமுகவின் கருத்தியலை வலதுசாரிக் கருத்தியலாக சாய்க்க முயன்றும், பின்வாங்கியும் தடுமாறிக் கொண்டிருந்தார்.

வாஜ்பேயியை, மோடியை ஜெயலலிதா எதிர்த்தபோதும் எதிர்காலத்தில் தங்கள் கருத்தியல் கூட்டாளி அவர்தான் என்ற தெளிவு பாஜகவுக்கு இருந்த காரணத்தால்தான் அவருக்குப் பெரிய தொந்தரவு எதையும் அவர்கள் தரவில்லை.

தடுமாற்றம் நிறைந்த காலகட்டத்தில் உறுதியாகத் தொடரமுடியாத நிலையில் ஜெயலலிதா எடுத்த பிற்போக்கு நிலைப்பாடுகள் அப்போது உடனடி ஆபத்தாக இல்லை. ஆனால், இன்று பாஜக காலூன்றி ஆலமரமாக கிளைபரப்பி நிற்கும் காலகட்டத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் அவர் மிக மோசமான வலிமை மிக்க இந்துத்துவ சர்வாதி காரியாக மாறியிருப்பார். அவர் இல்லாத காரணத்தால் பலவீனமான எடப்பாடியால் அப்படி ஆக முடியவில்லை.

காங்கிரசைப்போல அல்லாமல், தீவிர வலதுசாரி கருத்தியலும், அரசியலும் கொண்ட பாஜக, மதவெறியை ஆயுதமாகப் பயன்படுத்தி நாட்டை ஒற்றையாட்சியை நோக்கி நகர்த்தும் காலம் இது. அதற்கேற்ப அவர்கள் சவாரி செய்வதற்கான அதிமுகவும் அந்தத் தீவிரப் போக்குகளை உள்வாங்கிச் செயல்படத் தொடங்கியுள்ளது. என்னதான் அதிமுக ஆர்.எஸ்.எஸ். பரிவாரமாகவே அவதாரம் எடுத்தாலும், ஆதிக்க, விரிவாக்க வெறிகொண்ட பாஜக, அதிமுகவை நீண்டகாலம் தனித்து செயல்பட அனுமதிக்காது. தான் காலூன்றும் வரை பயன்படுத்திக்கொண்டு, வேலை முடிந்த பிறகு அதைத் தூக்கி வீசும். ஒருவேளை தனித்துச் செயல்பட அதிமுக அனுமதிக்கப்பட்டாலும், அதற்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது.

எப்படிப் பார்த்தாலும், இனி எதிரணியில் இருக்கப்போவது இந்துத்துவ பாசிச அரசியல்தான். இந்த அரசியல் மக்களுக்குத் தெளிவாக பட்டவர்த்தனமாகத் தெரிவதால், இந்தத் தேர்தலில் திமுக வெல்வதற்கு உடனடியாக ஆபத்து இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், திராவிட அரசியல் ஆதாரமான திராவிடக் கோட் பாடுகளை எதிர்ப்பதற்கு இருமுனையிலும் ஆளில்லை என்ற நிலை இனி இருக்காது.

அவசரமாகத் தேவை: ஒரு எதிர்க்கட்சி

தோல்வியில்லாமல் தொடர்ந்து திமுகவே ஆள முடியாது. அப்படித் தோற்கும்போது ஆட்சிக்கு வரப்போவது 10 ஆண்டுகள் ஆனாலும் சரி பாஜகவாகவோ, பாஜகவின் பிரதியாக உருவெடுக்கும் அதிமுகவாகவோ இருக்குமானால், சுமார் 60 ஆண்டுகாலம் தமிழ்நாடு சமூகநீதி அரசியலால் பெற்ற முன்னிலையெல்லாம் அதல பாதாளத்தில் விழும்.

சாதிமத வெறியின் சமர்க்களமாக, மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசும் சாக்கடையாக, கல்வியும், நலவாழ்வும் அழிந்த, வருணா சிரமத்தின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு மாறும்.

இதைத் தடுப்பது எப்படி? ஒரு முனையில் திமுக இருக்கிறது. மறுமுனைக்கு ஓர் எதிர்க் கட்சியை மக்கள் மத்தியில் இருந்து முகிழ்த்தெழ வைக்கவேண்டும். அதற்கான நம்பிக்கை விதைகளைச் சுமந்துகொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளோ, கம்யூனிஸ்டுகளோ இப்போது திமுக கூட்டணியின் தவிர்க்க முடியாத அங்கங்களாக உள்ளன. இல்லா விட்டாலும், அவர்களால் முழு வீச்சில் எதிர்க் கட்சியாக உருவெடுக்க முடியாது. அதற்கான சமூக, வரலாற்றுத் தடைகள் உள்ளன.பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!

ஆனால், மாற்று சக்தி மக்கள் மத்தியில் இருந்து முகிழ்க்காமல், இந்தப் பாசிச சரிவைத் தடுத்து நிறுத்த முடியாது. சரிந்துவிட்டால் மீண்டெழ யுகங்கள் ஆகும்.

எனவே, எதிர்க்கட்சிப் பாத்திரத்தை எதைக் கொண்டு நிரப்புவது என்ற உரையாடலை, திராவிட, அம்பேத்கரிய, மார்க்சிய சக்திகள் முன்னெடுத்து, தெளிவாக வகுத்து செயல்பாட்டை போர்க்கால வேகத்தில் செயல் திட்டத்தைத் தொடங்க வேண்டும். அத்தகைய புதிய சக்திகளைத் தங்களுக்குள் இருந்து வார்த் தெடுக்கும் அரசியல் தெளிவும், கருத்தியல் ஆழமும் கொண்டதுதான் தமிழ்நாடு என்ற நம்பிக்கை மட்டுமே நமது கையிருப்பு.

பார்லிமென்டில் 8வது நாளில் சிக்கிய மோடி!  சம்பவம் செய்யும் ராகுல்!

MUST READ