தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவி, ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதே சமயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் இணைந்து ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரவியின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி, என் வாழ்வின் அழகான துணை கெனிஷா தான் என்றும் அவர் வந்த பிறகுதான் தன் வாழ்வில் ஒளியை கொடுத்தவர் என்று குறிப்பிட்டு அறிக்கையை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த அறிக்கையில், தன் மனைவி ஆர்த்தி தன்னை கணவராக பார்க்கவில்லை எனவும் தன்னை தங்க முட்டையிடும் வாக்காக தான் பார்த்தார் எனவும் கூறியிருந்தார். மேலும் பலமுறை நான் கடன் உத்திரவாதம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். பத்து வருடங்களுக்கு முன்பாக என் மாமியார் என்னை கடன் உத்தரவாதம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தினார். அவர்களின் லாபத்திற்காக என்னை ஒரு கருவியாக பயன்படுத்தினார்கள். இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன் இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்” என்று தனது மனைவி ஆர்த்தியின் மீதும், அவருடைய தாயார் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார் ரவி.
இந்நிலையில் ரவியின் மாமியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த சில காலமாக கொடுமைக்காரி, குடும்பத்தை பிடித்தவள், பணத்தை, சொத்தை அபகரித்தவன் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்களை என்னை பற்றி வருகிறது. அப்பொழுது இதற்கு விளக்கம் தர வேண்டும் என நினைத்தேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மௌனமாக இருந்தேன். இப்போதும் நான் இதற்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால் அந்த பொய்கள் எல்லாம் உண்மையாகிவிடும். கடந்த 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற படத்தை தயாரித்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சின்னத்திரைகள் கவனம் செலுத்தி வந்த எனக்கு 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ரவி, நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை கொடுத்தார். அதன்படி அந்த ஆண்டு அடங்கமறு என்ற திரைப்படத்தை தயாரித்தேன். அந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. மீண்டும் அவரின் ஆலோசனையின் பேரில் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று திரைப்படங்களை என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து எடுப்பேன். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கினேன். அந்த பணத்தில் 25 சதவீதம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கினேன். இதற்காக என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், நான் அவருக்காக செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால் ஜெயம் ரவி அவர்கள், இந்த படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பலகோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததற்கான பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
View this post on Instagram
கோடிக்கணக்கான ரூபாய் வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரம் இருந்தால் அவர் அதை எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இன்றும் நான் மகனாக நினைக்கும் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எப்போதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம். நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்தில் இருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக, அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும், மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழா வெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள், ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமக்காதீர்கள். அதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.