ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் கார்த்திக் சுப்பராஜ். இவர் தனித்துவமிக்க படங்களை இயக்கி தற்போது வரை ஒரு ட்ரெண்ட் செட்டர் இயக்குனராக அறியப்படுகிறார். இப்போதும் கூட யூடியூபில் இவர் இயக்கிய குறும்படங்களை விரும்பி பார்ப்பவர்கள் அதிகம். அந்த அளவிற்கு இவருடைய குறும்படங்களாக இருக்கட்டும் அல்லது திரைப்படங்களாக இருக்கட்டும் இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கார்த்திக் சுப்பராஜை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
கார்த்திக் சுப்பராஜ் முதன்முதலாக விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோரின் நடிப்பில் பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். குறைந்த அளவிலான பட்ஜெட்டில் பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்து வித்தியாசமான கன்டன்டில் இவர் இயக்கி இருந்த பீட்சா திரைப்படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று, முதல் படத்திலேயே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதிலும் படத்தின் இறுதியில் இவர் வைத்திருந்த ட்விஸ்ட் இன்று வரையிலும் பேசப்படுகிறது. அதே சமயம் விஜய் சேதுபதிக்கும் இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து ஜிகர்தண்டா எனும் பெயர் சொல்லும் படைப்பை கொடுத்தார். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் அடுத்ததாக சமூக அரசியல், பெண்களின் ஒடுக்கு முறையை மையமாக வைத்து இறைவி எனும் வெற்றி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து இவரது திறமையால் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ரஜினி, விஜய் சேதுபதியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய புகழ்பெற்றார். இவ்வாறு தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் அசால்ட் செய்து தமிழ் சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். கடைசியாக இவர் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆல் டைம் பேவரைட் இயக்குனராக வலம் வரும் கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் கார்த்திக் சுப்பராஜுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.