திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) வெளியிட்டுள்ளது. இதன்படி, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள திரைப்படங்களின் தலைப்புகளை ஆய்வுக் குழு அல்லது மறுஆய்வுக் குழு பரிசீலித்து, தேவைப்பட்டால் மாற்றம் செய்ய பரிந்துரைக்கலாம்.


திரைப்படத்தின் தலைப்பு, தயாரிப்பாளர்கள் விளம்பரங்களில் அறிவித்துவிட்டார்கள் என்பதற்காகவோ, தணிக்கைச் சான்றிதழுக்காக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுவிட்டார்கள் என்பதற்காகவோ இறுதியானதாகக் கருதப்படாது என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 26-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அறிவுறுத்தல், திரைப்படத் தணிக்கைச் சட்டம் 1952 மற்றும் திரைப்படத் தணிக்கை விதிகள் 2024-ன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
முழுமையான திரைப்படத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்
திரைப்படங்களை தணிக்கைக்கு அனுப்பும்போது, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட இறுதிப் பதிப்பையே சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராபிக்ஸ், தலைப்புகள், கிரெடிட்ஸ், வசன வரிகள், பின்னணி இசை, ஒலிக்கலவை உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக இருக்க வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் திரைப்படத்தைப் பார்க்க உதவும் வகையிலான தேவையான வசதிகளும் இறுதிப் பதிப்பில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தற்காலிக கிராபிக்ஸ், முழுமையடையாத காட்சிகள், தற்காலிக இசை அல்லது தேவையான வசதிகள் இல்லாத திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவை விதிமுறைகளுக்கு இணங்காத விண்ணப்பங்களாகக் கருதப்படும். இதனால் விண்ணப்பம் தாமதமாகலாம், திருப்பி அனுப்பப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதியை காரணம் காட்டி விரைவாக சான்றிதழ் பெற முடியாது
திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஏற்கெனவே அறிவித்துவிட்டோம் என்பதற்காக, தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்த முடியாது என்றும் சென்சார் போர்டு தெளிவுபடுத்தியுள்ளது.
டிரெய்லர் அல்லது டீசர் வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட எந்த அறிவிக்கப்பட்ட தேதியும் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கான காரணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் காலக்கெடுவின்படியே திரைப்படங்கள் பரிசீலிக்கப்படும். எனவே, தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்பட வெளியீட்டுத் தேதிக்கு முன்கூட்டியே போதிய கால அவகாசம் அளித்து தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளால் தயாரிப்பாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தில் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றிய பின்னரே விண்ணப்பம் பெறப்பட்டதாகக் கணக்கிடப்படும். அதன் பிறகே திரைப்படம் பரிசீலனைக்கான வரிசையில் சேர்க்கப்படும்.
இந்த புதிய வழிகாட்டுதல்கள் மூலம் திரைப்படத்தின் தலைப்பு முதல் இறுதிப் பதிப்பு வரை பல்வேறு அம்சங்களை சென்சார் போர்டு பரிசீலிக்க முடியும். குறிப்பாக, படத்தின் தலைப்பு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் வரை இறுதியானது அல்ல என்ற அறிவுறுத்தல் திரையுலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.
“ராமாயணம் வெறும் திரைப்படம் அல்ல; ஓர் அனுபவம்!” – படத்தைப் பாராட்டி நெகிழ்ந்த இயக்குநர் அட்லி!
