விஜய் என்னும் கல்லூரியில் இருந்து பாடம் படித்து வந்த 3 இயக்குனர்கள் தற்போது இந்திய அளவில் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
சீனியர் ஹீரோக்களுடன் மாஸான கமர்சியல் படங்கள் செய்து இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் கொடுக்க முடியும், அந்தத் திறமை எங்களுக்கு இருக்கிறது என்பதை தமிழ் சினிமாவின் 3 இயக்குனர்கள் நிரூபித்துள்ளனர்.

முதலில் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் அதையடுத்து ‘கைதி’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக மாறப் போகிறேன் என்று ஆணித் தரமாக அடித்துச் சொன்னார்.
‘கைதி’ படத்தின் பெரும் வெற்றி அவருக்கு விஜயை இயக்கும் வாய்ப்பு பெற்று தந்தது. ‘மாஸ்டர்’ படத்தில் தன் வித்தையை பாதி மட்டுமே அவரால் காண்பிக்க முடிந்தது. இருப்பினும் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றது. அந்தப் படத்தை எடுத்து அவருக்கு தன்னுடைய ஆஸ்தான கனவு நாயகன் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு ‘விக்ரம்’ படம் மூலமாக அசுரத்தனமான வெற்றியை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.
அதேபோல தான் தனது முதல் படமான ‘ராஜா ராணி’யிலே சூப்பர் ஹிட் கமர்சியல் படம் கொடுத்த அட்லீ இரண்டாவது படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஆன விஜயை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
‘தெறி’ படத்தில் சுமார் புகுந்து விளையாடி இருந்தார். டேய் தம்பிகளா கமர்ஷியல் படம் எப்படி எடுக்கணும்னு நான் கத்துத் தரேன் வாங்க என்று சொல்லும் அளவுக்கு அந்தப் படம் ஹிட் கொடுத்தது.
இன்றளவும் அட்லியின் சிறந்த படம் ‘தெறி’ தான் என்றும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி விஜயை வைத்து அடுத்தடுத்து ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்கள் கொடுத்த அட்லீ தற்போது பாலிவுட் வரை சென்று பாலிவுட் பாட்ஷா ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் தற்போது இந்த ஆண்டின் பெரும் கமர்சியல் பிளாக்பஸ்டர் என்று அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.
அதே போல ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களின் மூலம் டார்க் காமெடியை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைத்த நெல்சன் அதையடுத்து விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார்.
அந்த படம் ஓரளவுக்கு கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொண்டு வந்தது. பீஸ்ட்டில் தவறவிட்டதை ஜெயிலரில் ஒட்டுமொத்தமாக சேர்த்து ஜெயித்துவிட்டார் நெல்சன்.
இவ்வாறாக விஜய் என்னும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியான இந்த 3 மாணவர்களும் இன்று இந்திய அளவில் பேசப்படும் இயக்குனர்களாக உருவெடுத்துள்ளது தமிழ் ரசிகர்களுக்கு பெருமை தானே!