திருத்தணி அருகே 5 மாதம் கர்ப்பம் தறித்த கல்லூரி மாணவிக்கு செவிலியர் கருக்கலைப்பு செய்ததில், உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், செவிலியர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. அவர் ஆர்.கே.பேட்டையில் உள்ள செவிலியர் டிப்ளமோ பயிற்சி கல்லூரியில் படித்து வந்துள்ளாா். மாணவிக்கு கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். மருத்துவ பரிசோதனையில் அவர் 5 மாதம் கர்ப்பம் தறித்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கல்லூரி மாணவி அண்ணன் தங்கை உறவுமுறையான அதே கிராமத்தைச் சேர்ந்த (17) வயது சிறுவனை காதலித்து கர்ப்பமானதாக தெரியவந்தது.
இதையடுத்து சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் 5 மாதம் கர்ப்பம் தறித்த கல்லூரி மாணவிக்கு அவரது பெற்றோர் ஆந்திராவில் நகரி அருகே பன்னூருக்கு அழைத்துச் சென்று செவிலியர் ஒருவர் மூலம் கடந்த 14 ம் தேதி கருக்கலைப்பு செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஒரு சில நாட்களில் மாணவிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பரிசோதனையில் வயிற்றில் குழந்தை இறந்துள்ளது தெரியவந்தது. உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

செவிலியர் கருக்கலைப்பு செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கல்லூரி மாணவி இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவியின் பெற்றோர்,உறவினர் மற்றும் செவிலியர் ஆகியோரிடம் திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.