கால்நடை வியாதிகளுக்கான மருந்து விற்பனை எனக்கூறி ஆன்லைன் மோசடி செய்த “Money Mule” மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனா்.சென்னை, சௌகார்பேட்டை, நாராயண முதலி தெருவில் சுரேஷ் குமார் பி கவாட், என்பவர் “சங்கர்ஜி பிரித்விராஜ் & சன்ஸ்” என்ற பெயரில் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மேற்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த Henry Mensah என்பவர் +22892612216 மற்றும் +22893090157 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு, அவர் மேற்கு ஆப்ரிக்காவில் Galaxy Veterinary Company Limited என்ற பெயரில் கால்நடைகளுக்கான பல்வேறு வியாதிகளுக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான Hutrax Q2 Extract மருந்து நிறுவனம் வைத்துள்ளதாகவும் இந்தியாவில் அவருடைய நிறுவனத்தை நடத்த விரும்புவதாகவும், அதற்காக சுரேஷ் குமாரை இந்தியாவில் ஏஜெண்டாக நியமித்து மேற்கண்ட மருந்தை மீண்டும் தானே அதிக விலைக்கு பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியிலேயே AS Enterprises and Indu Enterprises என்ற நிறுவனத்திடம் Hutrax Q2 Extract இருப்பதாகவும், அவர்களிடம் வாங்கி அனுப்புமாறும் சோதனையில் சரியாக இருந்தால், டாக்டர் முகமது ஐசாகா என்பவர் மூலம் 150 லிட்டர் வாங்கி கொள்வதாகவும் கூறியுள்ளார். சுரேஷ்குமார் AS Enterprises and Indu Enterprises என்ற நிறுவனத்திடமிருந்து 30 லிட்டர் வாங்குவதற்காக அவர்களது வங்கிக்கணக்கிற்கு ரூ.22,60,000 பணத்தினை 9 தவணைகளாக அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து 8 லிட்டர் மட்டுமே கொரியர் மூலம் கிடைக்கப்பெற்றதால், முகமது ஐசாகாவிற்கும் Henry Mensahவிற்கும் தொடர்பு கொண்ட போது அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

அப்போது தான் ஏமாற்றப்பட்டதை சுரேஷ் குமார் தெரிந்து கொண்டு, தான் இழந்த பணம் ரூ.22,60,000 மீட்டு தரும்படி சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பயன்படுத்திய வங்கிக்கணக்கின் விபரங்கள், பணபரிவர்த்தனை தொடர்பு விவரங்கள், முகவரி ஆகியவை மூலம் மோசடி செய்த நபரான தெலுங்கான மாநிலம், வாராங்கல் மாவட்டம், சின்ன தூண்டலா பகுதியைச் சேர்ந்த அஜ்மீரா சுதாகர்(31) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய Oppo செல்போன்-1 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் குற்ற செயலுக்காக 7 வங்கிக் கணக்குகளை துவங்கியுள்ளதும், அவரது வங்கிக் கணக்குகள் மீது இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 6 சைபர் கிரைம் வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் அஜ்மீரா சுதாகர், மற்ற மோசடி நபர்களுடன் மும்பைக்கு சென்று அவரது வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.20,40,000 ஐ நவி மும்பை மற்றும் செம்பூரிலும் உள்ள வங்கிகளுக்கு நேரில் சென்று செக் மூலமாகவும் ஏடிஎம் மூலமாகவும் பணத்தை எடுத்து மற்ற மோசடி நபர்களிடம் கொடுத்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, அஜ்மீரா சுதாகர் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம், பாலநாடு மாவட்டம், உப்பரபாளம் பகுதியைச் சேர்ந்த யரகோர்லா ஸ்ரீனு (எ) அகில்(32) என்பவரை கைது செய்தனர்.
குற்ற செயலுக்கு பயன்படுத்திய I Phone 15 Pro max செல்போன்-1 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அஜ்மீரா சுதாகர் மற்றும் யரகோர்லா ஸ்ரீனு (எ) அகில் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, இருவரும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக, அஜ்மீரா சுதாகர் என்பவர் போட்டோகிராபர் பணி செய்து வருவதும், யரகோர்லா ஸ்ரீனு (எ) அகில் என்பவர் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இருவரிடமும் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் முகம் தெரியாத சைபர் கிரைம் மோசடி நபர்கள், தங்களது வங்கி கணக்குகளை பணம் கொடுத்து வாங்கி அதன் மூலம் மோசடி செயல்களை அரங்கேற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மோசடிகளுக்கு இவர்கள் வங்கி கணக்குகளை விற்பனை செய்தததுடன் மோசடிதாரர்களுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இவர்களைப் போல இன்னும் பல நபர்கள் வங்கி கணக்குகளை விற்பனை செய்து “Money Mule” ஆகவும், இடைத்தரகர்களாகவும் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்க பட்டது.
தங்களது வங்கி கணக்குகளுக்கு மோசடி செய்யப்பட்ட நபரிடம் இருந்து வரும் பணத்தை இந்த நபர்கள் வெவ்வேறு நகரங்களுக்கு சென்று எடுத்து அதனை அங்குள்ள வங்கி கணக்குகள் மூலம் அடையாளம் தெரியாத சைபர் மோசடி கும்பலுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டு அனுப்பி வருவதும் அதன் மூலம் ஒரு மோசடி சம்பவத்துக்கு, அதன் மதிப்பை பொறுத்து ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் பணம் பெறுவதும் தெரியவந்தது.
குறிப்பாக மோசடி கும்பல் டெல்லியில் இருப்பதாக கூறிய AS Enterprises and Indu Enterprises என்ற நிறுவனம் போலியாக செயல்பட்டு, அந்த போலி நிறுவனத்தில் Hutrax Q2 Extract என்ற மருந்தை ஆர்டர் செய்யச் சொல்லி அங்கிருந்து கொரியர் மூலம் போலியாக தயாரிக்கப்பட்ட மருந்து சைபத் கிரைம் குற்றவாளிகள் அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல பல நபர்களிடம் இதே பாணியில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள “Money Mule” மற்றும் இடைத்தரகரான அஜ்மீரா சுதாகர் என்பவரின் சகோதரரான அஜ்மீரா சீனிவாஸ் என்பவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். “Money Mule” மற்றும் இடைத்தரகர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மோசடி கும்பல் எந்த நாட்டில் இருந்து செயல்படுகிறது? இதன் பின்னணியில் யார் யார் உள்ளார்கள்? மொத்தமாக எத்தனை நபர்களை ஏமாற்றி உள்ளனர்? என்பது குறித்து சென்னை வடக்கு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொதுச்சமூகம் மன்னிக்காது – தங்கம் தென்னரசு!