Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் மேலும் ஒரு என்கவுண்டர் - ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தற்காப்பிற்காக சுட்டதாக தகவல்

சென்னையில் மேலும் ஒரு என்கவுண்டர் – ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தற்காப்பிற்காக சுட்டதாக தகவல்

-

ஆம்ஸ்ட்ராங் கொலை தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா இன்று அதிகாலை போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகள், ரவுடிகள் என்று இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரௌடிகளையும் போலீசார் தேடி வந்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் சிசிங் ராஜாவை கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக சீசிங் ராஜா கைது செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து, சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வநதபோது, நீலாங்கரை பகுதியில் வைத்து விசாரணை நடத்திய போது, சீசிங் ராஜா போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் சீசிங் ராஜா உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 32க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், 2-வது நபராக சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ