திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில், சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38) என்பவருடன் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. சங்கீதா இனிப்பு வகை மக்காச்சோளத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக ராஜ்குமாரிடம் தெரிவித்தார். ராஜ்குமார் தனக்கும் இனிப்பு வகை மக்காச்சோளம் வேண்டும் என்று சங்கீதாவிடம் கேட்டுள்ளார். அப்போது மக்காச்சோளத்தை வழங்கும் விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்களை தருவதாகவும் அதில், பணத்தை செலுத்தினால் உடனடியாக மக்காச்சோளத்தை அனுப்பி வைப்பதாக சங்கீதா தெரிவித்தார்.
இதனை அடுத்து இருவருக்கும் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இனிப்பு வகை மக்காச்சோளம் விற்பனை தொடர்பான வரவு செலவு கணக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வருடம் அளவில் சங்கீதா அனுப்ப சொல்லிய வங்கி கணக்குகளில் தனித்தனியாக பிரித்து ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 பணத்தை ராஜ்குமார் செலுத்தினார். ஆனால், சங்கீதா மக்காச்சோளத்தை அனுப்பவில்லை. மக்காச்சோளம் அனுப்பும்படி கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்து வந்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் விசாரணை செய்யும் போது சங்கீதா தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் வங்கி கணக்குகளை கொடுத்து ரூ.10,73,67,906 பணத்தை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ராஜ்குமார் கடந்த ஜனவரி மாதம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீபிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி சங்கீதா 10 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் சேலத்தை சேர்ந்த சங்கீதா மற்றும் அவரது கணவர் சரவணன் மீது கடந்த மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சங்கீதாவை சேலத்தில் வைத்து போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சாம்பாரில் எலி… கேண்டினுக்கு சீல் வைத்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை