”நம்ம யாத்திரி” கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து தங்கள் கார்களை ஓட்டும் டிரைவர்கள் எட்டு பேர் சில தினங்களுக்கு முன் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரில் ”புழுதிவாக்கத்தில் இருந்து நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு (Standard Chartered) வங்கிக்கு தினமும் ஒரு நபர் புக்கிங் செய்துள்ளார் எனவும் சொன்ன இடத்தை தவிர்த்து 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் முன்னரே மற்ற இடங்களில் இறங்கி கொண்டு, பேடிஎம் – ல் (PAYTM) பணம் அனுப்பி விட்டதாக கூறி ஏமாற்றியுள்ளார் என தெரிவித்திதனர் .
பணம் வரவில்லை என செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டால் கார் ஓட்ட கால் இருக்காது என மிரட்டியதாகவும் டிரைவர்கள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அந்த நபர் பணியாற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு (Standard Chartered) நிறுவனத்திடமும் தகவல் தெரிவித்துள்ளோம் என போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
”நம்ம யாத்திரி” ஆப் என்பது ஓலா (OLA), ஊபர் (UBER) போன்ற நிறுவன செயலிகளைப் போல் அல்லாமல் நேரடியாகவே டிரைவர்களின் கணக்கில் பணம் செலுத்தும் ஆப் ஆகும்.
இதனால் இந்த இளைஞரின் மோசடி டிரைவர்களுக்கு சீக்கிரமாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மேற்கு மண்டல சைபர்கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருத்தணியை சேர்ந்த ரியாஸ் ரபீக்(23) என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் கூகுளில் போலி பேடிஎம் ஆப் களை டவுன்லோட் செய்து கால் டாக்ஸி நிறுவன டிரைவர்களை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.
இந்த போலி செயலியின் மூலம் பெரிய நிறுவனங்களில் பொருட்கள் வாங்கிவிட்டு போலி பேடிஎம் செயலியை பயன்படுத்தி பணம் போடுவது போல் நடித்தால் கையோடு மாட்டிக் கொள்வார் என்பதால் உணவகம், காலனியகம், கார் புக்கிங், மளிகை கடை என சிறிய நிறுவனங்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்கில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக பணியாற்றிவருகிறார் எனவும் இதற்கு முன் அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார் எனவே அங்கு பணியாற்றும் போது இதே போல் வேறு ஏதாவது மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா?எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.