10 கிராம் தங்கத்திற்காக சித்தி மகளை கொலை செய்த அண்ணனின் மரண தண்டனையை குற்றவாளி இயற்கையாக மரணம் அடையும் வரை ஆயுள் கால தண்டனையாக மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களின் ஒரே மகள் லோகப்பிரியா பழனியப்பன். கடந்த 2013ல் இறந்துவிட்டார். கணவர் இறந்ததால் அவரது மனைவி சிவகாமிக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 27-04-2021ல் வீட்டில் லோகப்பிரியா மட்டும் இருந்தபோது லோகப்பிரியாவை அவரது அண்ணன் முறை கொண்ட திருமயம் பெருந்துறையை சேர்ந்த லெட்சுமணன ( எ) சுரேஷ்(32) என்பவர் நகை கேட்டு கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், அவரிடம் இருந்த பத்து கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.

10 கிராம் தங்க சங்கிலி, அவரது செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தவர் ஸ்கூட்டரையும் எடுத்து சென்றுள்ளார். சொந்தச் சித்தி மகளையே அண்ணன் கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கணேஷ்நகர் போலீஸார், சுரேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், கொலைக்குற்றப் பிரிவில் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து லட்சுமணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தார்.
மரண தண்டனை உறுதி செய்வது குறித்து காவல்துறை தரப்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆர். பூர்ணிமா ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆஜராகி, அரசு தரப்பு இந்த வழக்கை நியாயமான முறையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த கொலை வழக்கு மரண தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கும் “அரிதிலும் அரிதான வழக்கு” வகையின் கீழ் வரது என்பதால்,, மரண தண்டனையை இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்குகளின் வரம்பை தாண்டவில்லை. இந்த வழக்கு மரண தண்டனை வழங்குவதற்கான அளவுகோலை நிறைவேற்றவில்லை. சாட்சியங்களின் தன்மை மற்றும் சம்பவம் நடந்த பிறகு மேல்முறையீட்டாளரின் நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய ‘அரிதிலும் அரிதான’ வகையின் கீழ் வரும் வழக்கு அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.
இவரால் சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்றும், அவரை சீர்திருத்துவது சாத்தியமில்லை என்றும் காட்ட எந்த ஆவணமும் இல்லை. எனவே, இயற்கை மரணமடையும் வரை ஆயுள் தண்டனையாக மாற்றுவதன் மூலம் நீதியின் நோக்கங்கள் போதுமான அளவு பூர்த்தி செய்யப்படும். எனவே, மனுதாரரின் மரண தண்டனையை அவர் இயற்கையாக மரணம் அடையும் வரையிலான தண்டனையாக மாற்றியமைக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதி கவாய் குறித்து சாதிய வன்மத்துடன் சித்தரிக்கப்பட்ட AI வீடியோவால் பரபரப்பு…