சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி – நாகப்பட்டினம் பிரதான சாலையில் இந்தியன் வங்கியும், அதன் அருகிலேயே ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. கடந்த 5ஆம் தேதி நள்ளிரவு ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து, ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 600 கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் அசோக்குமார் என்பவர் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் அசோக், இளையராஜா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார், இளையராஜா ஆகியோர் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் கொண்டுவந்த பையை சோதனையிட்டபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த வில்பர்ட் ராஜ் (22) மற்றும் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் மேலச்சாலை கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.