சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’பிளாக், 29வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், கடந்த 5ம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத பெண் ஒருவர், ஒரு கோணி பையை இழுத்து வந்து கழிவுநீர் கால்வாயில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
அவர் யார் என விசாரித்தபோது, அண்ணாநகர் கிழக்கு, அன்னை சத்யா நகர், 7வது தெருவை சேர்ந்த அம்பிகா (57) என தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து நேற்று விசாரித்தபோது அவரது கணவர் சந்தானம் (60) என தெரியவந்தது. தொடர் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் குறித்து போலீசார் கூறியதாவது: “அம்பிகாவும், சந்தானமும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு, கிழக்கு அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் அம்பிகா ஹவுஸ் கீப்பிங் வேலையும் சந்தானம், நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவன காவலாளியாகவும் வேலைபார்த்து வந்துள்ளார்.

சந்தானம், தினமும் மதுபோதையில் அம்பிகாவை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன் மனைவியிடம் மதுபோதையில் சந்தானம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமான அம்பிகா, வீட்டில் இருந்த கத்தியால் சந்தானத்தை சரமாரி குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை வீட்டிலேயே சில நாட்களுக்கு வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில்தான் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வந்ததால் கடந்த 5ம் தேதி நள்ளிரவு கோணி பையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார்“ என்று போலீசாா் கூறினா். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நேற்று மாலை அம்பிகாவை கைது செய்தனர்.


