சென்னை மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் – தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்- வழக்கு விசாரணை
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில், சில பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன.இந்நிலையில் வடசென்னையில் மணலி பகுதியில் தேங்கிக் கிடந்த வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.
இந்நிலையில், ஊட்டி ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சென்னை மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கல்ந்துள்ளதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்திகளை சுட்டிக்காட்டிய தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு கேள்வி எழுப்பியது.
அப்போது, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் அப்துல் சலீம், வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதா என்பது விசாரிப்பதாகவும், இதற்கான தீர்வு என்ன என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து, இந்த வழக்கை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.