தேனி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு முக்கிய அரசிய கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை செலுத்தி உள்ளார்.
தேனி பெரியகுளத்தில் திமுக வேட்பாளராக முதல் வாக்கை பதிவு செய்தார் ஓபிஎஸ். வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “தமிழகம் எங்கும் அனைத்து மக்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் உற்சகமாக செலுத்தி வருகின்றனர். மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.
இதன் மூலம் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றியை மக்கள் மீண்டும் உறுதி செய்வார்கள். தமிழக முதல்வராக இரண்டாம் முறையாக மீண்டும் மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொள்ளும் நிலை ஏற்பட உள்ளது.

முதல் முறையாக விஜயின் தவெக போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அவர் எத்தனை சதவீதம் ஓட்டு வாங்க உள்ளாரோ அதை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என்றார். அவர் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருக்கிறாரா, இல்லையா என்பது மக்களின் முடிவு, ஓட்டு எண்ணும் நாளில் இதுபற்றி தெரிந்து விடும். எனினும் மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தேனி மாவட்டத்தில் இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நான் உட்பட மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவோம்” என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
வாக்கு சாவடியில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியீடு – தேர்தல் விதிமுறைகள் மீறல் சர்ச்சை
