திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தனித் தொகுதியில் வாக்கு செலுத்திய நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் முன்கூட்டியே வாக்கு சாவடிகளில் வாக்களிக்கும் தருணங்களை படம் பிடித்து வெளியிடுவது சட்ட விரோதம் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை மீறினால் சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரதிதாசனுக்கு ஆதரவாக நடேசன் என்பவர் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை மீறி இவ்வாறு வீடியோ வெளியிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
