தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செங்கல் சூளையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் அவர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்.


வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டு தகராறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தவெக கட்சியின் கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் வழங்கினால் மட்டுமே தொழிலை சுமுகமாக நடத்த முடியும் என விஜயகுமார் மிரட்டியதாக புகார்கள் எழுந்தன. இதனால் அதிருப்தியடைந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் ஒழுக்க நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, விஜயகுமாரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி தவெக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
