தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என தஞ்சையில் துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சியுள்ளாா்.
தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் தமிழ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திரு உருவ சிலை மற்றும் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் செயலாளர் இராமநாதன் உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் சிலையையும், இராமநாதன் ஆகியோரின் திருஉருவ சிலையையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முரசொலி எம்.பி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க கரந்தை தமிழ் சங்கத்தினுடைய வளாகத்திலே கலைஞரின் சிலையையும், சங்கத்துடைய முன்னாள் தலைவர் செம்மொழி வேலர் இராமநாதனுடைய சிலையையும் உங்களுடைய முன்னிலையிலே திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நிகழ்ச்சியினுடைய தொடக்கத்திலே தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடி இருக்கின்றோம். தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாகப் பாடப்பட்டது இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கத்தில்தான். அதன் பிறகு 1970-களில் கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழ்நாடு அரசினுடைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.
இது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தான். இதற்கு எழுந்து நின்று நம்முடைய மரியாதை செலுத்தத் தேவையில்லை என்று ஒரு கூட்டம் சொல்கிறது. இன்னும் சில பேர் சட்டப்பேரவையிலே இந்த பாட்டையே பாடக்கூடாது என்று ஒரு கூட்டம் சொல்கிறது. ஆனா இந்த பாடல் தமிழ்நாடு அரசினுடைய ஸ்டேட் ஆன்தம் மாநிலப் பாடல் என்பதை அறிவித்து அதைப் பாடும் பொழுது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையைப் போட்டவர் கலைஞர் தான். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் மீது கலைஞருக்கு எப்பொழுதுமே மிகப்பெரிய பற்றும் ஈடுபாடும் உண்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 1962-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் தஞ்சையில் போட்டியிட்ட போது கரந்தை பகுதியிலிருந்து தான் தன்னுடைய தேர்தல் பணிகளை அவர் செய்தார். கலைஞர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற கரந்தை தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் அத்தனை பேரும் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
அப்படிப்பட்ட கரந்தை தமிழ்ச் சங்கத்தில் கலைஞர் ராமனாதன் ஆகியோரின் சிலையையும் திறந்து வைக்கின்ற வாய்ப்பைக் கொடுத்த தமிழ்ச் சங்கத்திற்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கம் இன்றைக்கு 100 ஆண்டுகளைக் கடந்து தமிழ்ச் சேவை, கல்விச் சேவைன்னு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.
தமிழுக்கு வருகிற ஆபத்துகளை எதிர்க்கிறது ஒரு பக்கம். தமிழினுடைய பெருமையைப் பரப்புகிறது இன்னொரு பக்கம்னு இந்தச் சங்கத்துடைய பணிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என 1920-லேயே தீர்மானம் போட்டது கரந்தை தமிழ்ச் சங்கம்தான். இந்தச் சங்கத்துடைய தலைவராகப் பணியாற்றிய செம்மொழி வேலர் இராமனாதனின் பங்கு மிகுந்த சிறப்பு வாய்ந்தது.முக்கியம் வாய்ந்தது. தமிழுக்குத் தனிப் பல்கலைக்கழகம் தேவை என்று கரந்தை தமிழ்ச் சங்கம்தான் முதன்முதலாகத் தீர்மானம் போட்ட சங்கம்.
எல்லாத்தையும் விட ஒரு கூடுதல் மிகப்பெரிய ஒரு சிறப்பு 1937-ல் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைத் திணிக்கும்போது அதை எதிர்த்துத் தீர்மானம் போட்டதும் இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான். இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்துல நூற்றுக்கணக்கான மகளிரைப் பங்கேற்க வைத்த அன்னை தர்மாம்பாள் இந்தக் கரந்தையை, சேர்ந்தவங்கதான். அப்போது தொடங்கிய இந்தித் திணிப்பு முயற்சி இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நேற்று கூட நீங்க தொலைக்காட்சியில பார்த்திருப்பீங்க. திருச்சியில இருக்கக்கூடிய தெற்கு ரெயில்வே அலுவலக வாயிலில் இந்தி மொழியில் எழுதி வைத்ததை எதிர்த்து நம்முடைய முதலமைச்சர் தான் முதல் எதிர்ப்புக் குரல் பதிவு செய்தார்கள். அதுமட்டுமின்றி, இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய கல்வி நிதி ரூ. 3,500 கோடியை கொடுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் அந்த 3,500 கோடியை கொடுப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனா நம்முடைய முதலமைச்சர் 3,500 கோடி இல்லை.
10,000 கோடி கொடுத்தாலும் இந்தியையும் சமஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் எந்த நேரத்திற்கும் இடம் கிடையாது என்று உறுதியாக கூறிவிட்டார். கலைஞர் வழியில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.
தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச் சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய சர்வதேச விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகளும் நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழினுடைய அரிய நூல்கள் எல்லாமே இன்றைக்கு டிஜிட்டல் வடிவில் மாற்றப்படுகிறது. தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல்களை எல்லாம் தமிழில் கொண்டுவர முயற்சிகளை நம்முடைய அரசு எடுத்து வருகின்றது.
ஆனால் மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்கிறதில் மட்டும்தான் அக்கறையைக் காட்டி வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் நம்முடைய தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 147 கோடி ரூபாய்.
தமிழ் தமிழ்ன்னு சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகின்றது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். உண்மையாகத் தமிழுக்காக உழைப்பவர்கள் யார்? போலித்தனமாக நடிப்பவர்கள் யார்? என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். எனவே இந்த முக்கியமான நேரத்தில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அன்னைத் தமிழைப் காப்போம், ஆதிக்க மொழித் திணிப்பை என்றும் வீழ்த்துவோம்” என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின கூறினார்.
அன்பில் மகேஷ் குடும்பத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு இதோடு முடிவதில்லை – முதல்வர்


