தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநின்றவூர், ஆவடி, பட்டாபிராம் பகுதிகளில் 20 பட்டாசு கடைகள் அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட துணை கலெக்டர் மதுசூதனன் தலைமையில், ஆவடி வட்டாட்சியர், தீயணைப்பு அலுவலர், போலீசார் உட்பட 7 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மேற்கூறிய இடங்களில் உள்ள நிரந்தர பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, கடை உரிமம், தீயணைப்பான் கருவி, அவசர கால வழிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள், அதற்கான விதிமுறைகளின்படி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து கவனமாக ஆய்வு செய்தனர்.
அதேபோல், கடை அருகே பள்ளி, கல்லூரிகள், மின்மாற்றிகள், நிரந்தர கட்டடமா உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை செய்தனர். காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடந்த ஆய்வில் 13 கடைகளில் மட்டும் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.