காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் பதவிக்கு யூ டி காதர் வேட்புமனு தாக்கல்
காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு யூ டி காதர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் கர்நாடக மாநிலத்தின் முஸ்லீம் வகுப்பில் இருந்து முதல் சபாநாயகராக தேர்வாக உள்ளார் யூ டி காதர்.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்துடன் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 182 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர் இன்று மீதமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஸ்பாண்டே தலைமையில் பதவி பிரமாணம் எடுக்க உள்ளன.

இந்நிலையில் இன்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அமைச்சர் ஜமீர் அகமது கான் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் யூ டி காதர் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் தேர்வுக்கு சட்டமன்ற செயலாளர் ஏ.எம். விசாலாட்சி இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக சபாநாயகராக இதுவரை ஒரு இஸ்லாமியர் கூட சபாநாயகராக பணியாற்றியது இல்லை. இந்நிலையில் முதல் இஸ்லாமிய சபாநாயகராக யூ டி காதர் நாளை தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யூ டி காதர் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள நிலையில் இதற்கு முன்பு சுகாதாரம் உணவு போன்ற முக்கிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.