அயோத்தி ராமர் கோவில் கட்டுமான விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா, கோவில் கட்டிய பெருமையை ஏற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடந்த ஊழலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பிரதமரின் மௌனம் ஏன்?
”ராமர் கோவில் கட்டியதாக நாடு முழுவதும் பெருமைப்பட்டுக்கொள்ளும் பிரதமர், அதற்கான பெருமையை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், அதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கும் ஊழலுக்கும் பொறுப்பேற்க வேண்டும். இந்த ஊழலில் பல முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு உள்ளது. இதேபோல், பத்ரிநாத் கோவிலிலும் பக்தர்களிடமிருந்து பெறப்படும் கட்டண விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. எங்களின் முதன்மையான கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய ஊழல் விவகாரத்தில் பிரதமர் ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார் என்பதுதான்.”
உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை:
ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய அவர், “இந்த விவகாரத்தில் மூத்த பொறுப்புகளில் உள்ளவர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? தவறு செய்யவில்லை என்றால், பொறுப்பில் இருந்தவர்கள் ஏன் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றனர்?
எனவே, இந்த முறைகேடுகள் குறித்து ராமர் கோவில் அறக்கட்டளையைச் சேர்ந்த சம்பத் ராய், அனில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்த ஒட்டுமொத்த விவகாரமும் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று ராஜீவ் கவுடா தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
