நடிகை கஸ்தூரி கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பணியாற்றி வருபவர். அதே சமயம் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் பிரபு, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் கஸ்தூரி.
இந்நிலையில் தான் இவர், கடந்த 3ஆம் தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது தெலுங்கு பேசுபவர்கள் குறித்து அவதூறாக பேசினார். தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி தவறாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் கஸ்தூரியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை திருநகர் காவல்துறையினரிடம் நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் கொடுத்திருந்தனர். அதன்படி கஸ்தூரி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அதன் பின்னர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகினார் கஸ்தூரி. இருப்பினும் அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதேசமயம் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கஸ்தூரி, தெலுங்கு சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டது ஏன்? அதற்கான அவசியம் என்ன? என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் அவர் தன்னை கற்றவர் சமூக ஆர்வலர் அரசியல்வாதி என கூறும் பட்சத்தில் இப்படி ஒரு கருத்தை எப்படி தெரிவிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி.
இது தொடர்பாக, “தெலுங்கு மக்கள் அனைவரையும் குறிப்பிட்டு அத்தகைய கருத்தை கூறவில்லை. சில குறிப்பிட்ட தனிநபர்கள் குறித்து மட்டுமே அந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் மன்னிப்பு கோரியும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர் பேசிய வீடியோவும் மன்னிப்பு கூறியதும் சமூக வலைதளங்களில் இருக்கிறது. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? என்று கஸ்தூரி தரப்பில் வாதிடப்பட்டது.

மீண்டும் நீதிபதி,”குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் எனக் குறிப்பிட்டது ஏன்? என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு கஸ்தூரி தரப்பில், தவறு செய்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார் என்றும் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அவர் பேசியது தேவையில்லாதது. அவர் பேசிய வீடியோக்களை பார்க்கும்போது அது தேவையற்ற விளைவை ஏற்படுத்தும் தானே? அவர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதைப் போல் தெரியவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்துவதாக தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தது நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


