பெண்கள் தொழில் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக விளங்கும் DAY-NRLM திட்டம் மூலம் கடன் பெரும் வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.


கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய மத்திய அரசு தீன்தயாள் ஆண்டியோதய யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) திட்டத்தின் மூலம் பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. கிராம வளர்ச்சி அமைச்சகம் செயல்படுத்தும் இந்த திட்டம், நாட்டில் கிராமப்புற ஏழ்மையை குறைப்பதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 8 முதல் 10 கோடி கிராமப்புற ஏழை குடும்பங்களை சுய உதவி குழுக்களாக (Self Help Groups – SHGs) ஒருங்கிணைப்பது குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தலைமையிலான இந்தக் குழுக்களுக்கு நிதி சேவைகள், திறன் மேம்பாடு, தொழில் வாய்ப்புகள் மற்றும் நீண்டகால ஆதரவு வழங்கப்படுகிறது.
கடன் பெற தகுதி என்ன?
DAY-NRLM திட்டத்தின் கீழ், சுய உதவி குழுக்கள் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ந்து செயல்பட்டு இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் முறையான கூட்டங்கள் நடத்துதல், மாதாந்திர சேமிப்பு, உள்கடன் வழங்கல், நேர்மையான திருப்பிச் செலுத்தல் மற்றும் சரியான கணக்கு புத்தக பராமரிப்பு ஆகியவை அவசியம். புதிய குழுக்கள் 3 மாதங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டாலும் கடன் பெற தகுதி பெற முடியும்.
இந்தக் கடன்கள் சுயதொழில், விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, சிறு வணிகங்கள் உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
வட்டி சலுகை விவரம்
NABARD வழிகாட்டுதலின் அடிப்படையில், சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 250 பின்தங்கிய மாவட்டங்களில் பெண்கள் SHG-க்களுக்கு ரூ.3 லட்சம் வரை 7% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடனை நேர்மையாக திருப்பிச் செலுத்தும் குழுக்களுக்கு கூடுதலாக 3% வட்டி சலுகை வழங்கப்படுவதால், செயல்பாட்டு வட்டி விகிதம் 4% ஆக குறைகிறது.
மற்ற மாவட்டங்களில் வங்கியின் வழக்கமான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். இருப்பினும், திருப்பிச் செலுத்தல் சிறப்பாக இருந்தால் 7% வரை வட்டி சலுகை மாநில அரசுகள் மூலம் வழங்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் வரை உத்தரவாதமின்றி கடன்
DAY-NRLM திட்டத்தின் முக்கிய அம்சமாக, ரூ.10 லட்சம் வரை எந்த உத்தரவாதமும் (Collateral Security) இல்லாமல் கடன் பெற முடியும். இது கிராமப்புற பெண்களுக்கு தொழில் தொடங்கும் தைரியத்தையும் நிதி நம்பிக்கையையும் வழங்குகிறது.
தமிழ்நாட்டில் செயல்பாடு
தமிழ்நாடு அரசு, 2012-13 ஆம் ஆண்டு முதல் மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 நிதி பகிர்வு அடிப்படையில் DAY-NRLM திட்டத்தை “தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்” (TNSRLM) மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் பெண்கள் தொழில் வளர்ச்சி, குடும்ப வருமான உயர்வு மற்றும் சமூக மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது.
மொத்தத்தில், DAY-NRLM திட்டம் கிராமப்புற பெண்களுக்கு பொருளாதார சுயநிறைவை உருவாக்கும் சக்திவாய்ந்த வாய்ப்பாக விளங்குகிறது. ரூ.10 லட்சம் வரை உத்தரவாதமின்றி கடன் வழங்கப்படும் இந்தத் திட்டம், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு புதிய பாதையை அமைத்து வருகிறது.
மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்…. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்!


