வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் 3 புயல்கள் உருவாகியுள்ள நிலையில் , தற்போது புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலின் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் (நவ 26) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தொடர்ந்து வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என்றும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ-29) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மிக்ஜாம்’ (மியான்மர் நாடு) என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்தியா, பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளை தாக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 1ம் தேதி மணிக்கு 90 கி.மீ. வேகத்தை எட்டும் எனவும், இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுள்ளது. நாளை ( நவம்பர் 29ம் தேதி) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.