அதிமுக யாரையும் இழுக்கவில்லை; தானாக இணைகின்றனர்- ஜெயக்குமார்
அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர், யாரையும் நாங்கள் இழுக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரும் போராட்டத்தில் குதித்தனர். கூட்டணி கட்சிகளிடையே இந்த பிரச்னையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தது அதிமுக அரசுதான். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் ஒரு லட்சம் பொறுப்புகளுக்கு பெண்கள் வருவதற்கு அதிமுகதான் காரணம். மகளிர் காவல்நிலையம், மகளிர் கமாண்டோ படை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியுடன் காணப்படுவதால் மாற்றுக்கட்சியினர் இங்கு வருகின்றனர். அதிமுகவில் பாஜகவினர் இணைவதை பக்குவத்தோடு அண்ணாமலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அசுரவேகத்தில் அதிமுக வளர்வதால் தானாக முன்வந்து கட்சியில் இணைகின்றனர்.யாரையும் நாங்கள் இழுக்கவில்லை. ஆகவே அதிமுகவில் இணைவதை காழ்ப்புணர்ச்சியோடு அணுகக்கூடாது. அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம், அந்த சமுத்திரம் மீது கல்வீசினால் காணாமல்போய்விடும்.
தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும்போது தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் இதுபோன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. ஜெயலலிதா போன்ற தலைவர் யாரும் இல்லை, இனி பிறக்கவும் முடியாது. தலைவர்களே தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டக்கூடாது.பாஜக உடன் கூட்டணி தொடரும், அதில் மாற்றமில்லை. பாஜக மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் அதிமுகவில் இணைகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையுடன் செயல்படுவதே நல்லது” எனக் கூறினார்.