சென்னை திருவொற்றியூரில் எம்ஜிஆர் சாலையில் வட்டச் செயலாளர் கேபிள் டிவி ராஜா தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மண்டல குழு தலைவர் தனியரசு, மாமன்ற உறுப்பினர் சுசிலா ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக முன்னோடிகளுக்கு நல்ல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய ஆர் எஸ் பாரதி சி ஐ டி அறிக்கையை திசைதிருப்ப தான் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை பற்றி பேசி விட்டார், இந்து மதத்தை பழித்து விட்டார் என்று மாற்றி விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.
ஒன்றரை கோடி வைத்திருந்த செந்தில் பாலாஜியை இவ்வளவு நாள் சிறையில் வைத்திருக்கிறீர்கள், உதயநிதி தலைக்கு பத்து கோடி ரூபாய் தரேன்னு சொன்ன சாமியார் எத்தனை கோடி வைத்திருக்கிறார்? சட்டம் எதற்காக கொண்டு வந்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
கணக்கில் வராத பணம் யார் யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் தானே, சாமியார் எத்தனை கோடி வைத்திருக்கிறார் என்பதை கணக்கெடுக்க வேண்டும். பத்து கோடி ரூபாய் தருகிறேன் என்று சொன்ன சாமியாரை ED என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். 10 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்க வேண்டாமா? என்று கூறினார்.
திமுகவோட மோதியவன் எவனும் வென்றதாக சரித்திரமே கிடையாது. அண்ணாமலை கூறுகிறார் திமுகவை அழித்து விடுவேன் என்று அண்ணாமலைக்கு ஆயுள் ரேகை மோசமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். திமுகவை அழித்து விடுவேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் மலர் வளையம் வைத்தது திமுக தான்.
ஜவர்கலால் நேரு 1958 ல் திமுகவை விரும்புகிற நாட்டிற்கு மூட்டை கட்டி அனுப்புவேன் என்று கூறினார். ஆனால் நேருவின் மகளையும் மருமகனையும் நாங்கள் தான் காப்பாற்றினோம் இது எங்கள் ஜாதகம்.
பெருந்தலைவர் காமராஜர் எங்களைப் பற்றி இழிவாக பேசினார், கடைசியில் காமராஜருக்கு அனைத்தையும் செய்தது கலைஞர் தான். காமராஜர் பற்றி இப்பொழுது பேசும் அண்ணாமலை நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் என்று கூறுகிறார். காமராஜருக்கு காங்கிரஸ்காரன் செய்த நன்மையைவிட திமுக காரர்கள்தான் அதிகமாக செய்துள்ளார்கள் என்று சுட்டிக் காட்டினார்.
ராஜாஜி மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்குவேன் என்று கூறினார் அவருக்கு திமுக தான் மண்டபம் கட்டி மலர் மாலை வைத்தது.
திமுகவால் வளர்க்கப்பட்டு, தொப்பி வைத்து, கண்ணாடி போட்டு, ஓடாத படத்தை ஓட வைத்து, ஊருக்கு அறிமுகப்படுத்தி, பெரிய மனுஷன் எம்ஜிஆர் கடைசியாக 1984ல் காஞ்சிபுரத்தில் திமுக மாநாடு நடக்கும்போது திமுகவை தடை செய்வேன் என்று திருச்சியில் எம்ஜிஆர் பேசினார். எம்ஜிஆர் பேசியது அதுதான் கடைசி பேச்சு மேடையிலேயே விழுந்துவிட்டார். அதற்குப் பின்பு பேச்சு வரவில்லை மூன்று வருடம் பேசாமலேயே இருந்தார். திமுக பற்றி பேசுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொடை வள்ளல் என்று சொன்ன எம்.ஜி.ஆருக்கு இந்த கதி. பேசாமல் மூன்று வருடம் முதலமைச்சராக இருந்தார் என்று கூறினார்.
அதை அடுத்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்க்கிறேன் திமுகவை தெரியவில்லை என்று சொன்ன ஜெயலலிதாவின் நிலைமை அப்போலோ ஹாஸ்பிடல் சேர்க்கப்பட்டார். ஒரு கோடி ரூபாய்க்கு ஹாஸ்பிடல் இட்லி சாப்பிட்டவர்கள் அதிமுக தலைவர்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறினார். ஜெயலலிதா பேசாத பேச்சா? ஆனால் அவருக்கும் பிறந்தநாள் விழா எடுத்தது எங்கள் தலைவர் மு க ஸ்டாலின் தான் என்று கூறினார்.
அண்ணாமலை திமுக வரலாறு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த கட்சி தியாகத்தில் வளர்ந்த கட்சி இதை எவனாலும் அழிக்க முடியாது இதை அழிக்க நினைப்பவன் அழிந்து போய்விடுவான் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.