உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு காலத்தில் மதுரைக்குள் யாரும் கால் வைக்க முடியாது அது அழகிரியின் கோட்டை என இருந்தபோது தற்போது அரசியலில் அழகிரியே இல்லை. இதே போன்று தமிழக வெற்றி கழகம் கரூரின் கோட்டையை உடைக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.செப்டம்பர் 27-ல் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கிய நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கரூர் விவகாரத்திற்கு பிறகு வலி மிகுந்த நாட்களில் பயணம் செய்வதாக ஆதவ் அர்ஜுனா வேதனை தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டம் இதுவரை பல ஊர்களில் நடைபெற்றுள்ளது.
இதற்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை மக்கள் வழங்கிய நிலையில் சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் காவல்துறை உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என குற்றம் சாட்டினார். கரூர் பிரச்சாரத்திற்கு முன்பு பல மாவட்டங்களுக்கும் தவெக தலைவர் விஜய் சென்றபோது வரவேற்காத காவல்துறை கரூரில் மட்டும் வரவேற்றது ஏன்? என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியதோடு, பிரச்சாரம் நடைபெறக்கூடிய இடத்திற்கு காவல்துறையினர் எங்களை அழைத்துச் சென்றனர் என தெரிவித்தார்.

மேலும் கரூரில் செப்டம்பர் 27ம் தேதி சம்பவம் நடைபெற்ற போது என்னென்ன விவகாரங்கள் நடைபெற்றதோ? அதை அனைத்தையும் தலைமை நீதிபதியிடம் நாங்கள் ஒரு அறிக்கையாக சமர்ப்பிக்க இருக்கிறோம் என ஆதவ் அர்ஜுனா கூறினார். தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணையை தொடங்கிய பிறகு ஏன் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் தரப்பு நியாயத்தை மட்டும் கூறினர் என கேள்வி எழுப்பியதோடு, ஒரு நபர் ஆணையத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்றும் எழுப்பினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நபரை வைத்து வழக்கை தாக்கல் செய்துவிட்டு அதில் சம்பந்தமே இல்லாமல் விஜய் மற்றும் அவருடைய அரசியல் தலைமை பண்பு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டிருக்கிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாங்கள் நாட திட்டமிட்ட போது உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு வழக்கறிஞர்கள் யாரும் கிடைக்கக் கூடாது என்பதற்கான பல்வேறு சதிகளையும் திமுக செய்ததாக ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களுடன் வாழ்க்கை முழுவதும் அவர்களை தத்தெடுத்து பயணம் செய்ய இருப்பதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும் இதையெல்லாம் தகர்க்கும் வகையில் உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை இன்று வழங்கியுள்ளதாக கூறிய ஆதவ், தமிழ்நாட்டு அரசின் மீதும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.
அப்போது கரூர் விவகாரத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ”திமுக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அரசியல் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம் எனக் கூறியதோடு போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் அது குறித்து உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கக்கூடிய குழுவிடம் முறையீடு செய்யலாம் எனவும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அர்ஜுனா கருத்து தெரிவித்தார். ஒரு காலத்தில் மதுரைக்குள் யாரும் கால் வைக்க முடியாது அது அழகிரியின் கோட்டை என இருந்தபோது தற்போது அரசியலில் அழகிரியே இல்லை. இதே போல் தமிழக வெற்றி கழகம் கரூரின் கோட்டையை உடைக்கும் எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : தீர்ப்பு யாருக்கு பின்னடைவு? மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் விளக்கம்!