மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிஸ் அளித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல 5 மாநில தேர்தலிலும் வெற்றி பெற காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வரும் காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பாகவே மக்களுக்கு மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், 100 யூனிட் மின்சாரம் இலவசம், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பெண்களுக்கு உரிமைத் தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அடுக்கடுக்காக காங்கிரஸ் அளித்துள்ளது அம்மாநில வாக்களார்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.