எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்காதது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்
தமிழ்நாட்டில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். அவர் வருகையின் போது எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் விமான நிலையத்தில் இருந்து செல்வதற்கு முன்பாக ஈபிஎஸ் , ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித் தனியாக சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் அரசியல் ரீதியான நிகழ்வு எதுவும் வேண்டாம் என்று கருதியதால் கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதும், இதே போல ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பும் அரசியல் கவன பெறக்கூடியதாக அமையும் என்று கருத்தப்பட்டது. ஆனால் இறுதி சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சோகத்துடன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுக- பாஜக இடையே முரண்பாடுகள் இல்லை. நேர சூழல் காரணமாக பிரதமர்- ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறவில்லை. 2024 ஆம் ஆண்டு தேர்தல் திருப்பு முனையாக அமையும். 2026 தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அதிமுக ஆட்சி அமைக்கும். டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக அதிமுக இருந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன” எனக் கூறினார்.