தேர்தலில் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி, அமைப்பு ரீதியாக பின்னடைவை சந்தித்து வருகிறது. மாவட்ட செயலாளர்கள் போன்ற நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதையும் காண முடிகிறது. அதோடு, சீமான் பின்பு திரண்ட இளைஞர்கள் தற்போது, புதியதாக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய் பக்கம் அணி சேர தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விஜயை தொடர்ந்து சீமான் சரமாரியாக விமர்சித்து வருகிறார்.

இந்த சூழலில் தான், ரஜினியை சந்தித்து நட்பு பாராட்டி, சீமான் தனக்கு ஆதரவு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. காரணம் இன்றைய சூழலில் தமிழ் சினிமா துறையில் விஜயின் நேரடி போட்டியாளராக இருப்பது ரஜினி மட்டுமே. எனவே, அவருடன் நெருக்கம் காட்டுவது தனக்கு பலனளிக்கும் என சீமான் நம்புவதாக தெரிகிறது.

ஆனால் சீமான் -ரஜினியின் திடீர் நட்பை பாஜக உற்று நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் ரஜினி பாஜக நிலைப்பாட்டைக் கொண்டவர். திடீரென சீமானை பார்த்து பேசுவது ரஜினி ரசிகர்களை நாம் தமிழர் பக்கம் கொண்டு போய் சேர்க்கும் என அஞ்சுகிறது பாஜக. இதனை மனதில் வைத்தே பாஜக ஆதரவாளரான திரைப்பட இயக்குநர் பேரரசு தளது எக்ஸ் தளப்பதிவில், “என்ன நடக்கிறது இங்கே… அண்ணாமலை… அண்ணாமலை. சீக்கிரம் வாங்க இங்கே” எனப்பதிவிட்டுள்ளார்.
ரஜினி, விஜய், சீமான் அரசியல் இப்போது பேசுபொருளாகி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் மாறியுள்ளது. லண்டனில் இருந்து 28ம் தேதி தமிழகம் திரும்பும் அண்ணாமலை என்ன செய்யப்போகிறார்? என்னென்ன திட்டங்களை வைத்துள்ளார்? என விசாரித்தோம்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை அண்ணாமலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, மக்களவை தேர்தலையொட்டி, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டதுபோல, சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஜனவரி மாதத்துக்கு பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டிருக்கிறார்.
தொடர்ந்து சட்டப்பேரவை தொகுதி வாரியாகவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற இருக்கிறார். பின்னர், பெருங்கோட்டங்கள் வாரியாக பொதுக்கூட்டங்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளின் கூட்டங்களை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதேநேரம், திமுகவை வீழ்த்த புது வியூகம் அமைத்திருப்பதாகவும், இதையொட்டிய அண்ணாமலையின் செயல்பாடுகள் ஜனவரிக்கு பிறகு தீவிரமாக இருக்கும்’’ எனவும் பாஜகவினர் கூறுகின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தல் பாஜக – திமுக இடையிலான போட்டியாக இருக்கும் எனவும், அதை எதிர்கொள்வதற்கான முழுமையான செயல்திட்டங்களை அண்ணாமலை வகுத்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை அமைப்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார்’’ என்கிறார்கள்.