செங்கம் பேரூராட்சியில் மூன்று வார்டுகளை கொண்ட தோக்கவாடி பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பேரூராட்சியில் 3 வார்டுகளைக் கொண்ட பகுதி தோக்கவாடியில் சுமார் 3000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பகுதியில் ஏற்கனவே உள்ள மார்பளவு அம்பேத்கர் சிலையை புதுப்பித்து 7 அடி கொண்ட புதிய வெண்கல சிலையை அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து அனுமதி கேட்டு வழங்காததால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேனர் வைத்துள்ளனர்.
தோக்கவடி பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி எதிரே புரட்சியாளர் அம்பேத்கரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதனை புதிப்பித்து 7 அடி வென்கல சிலை அமைக்க செங்கம் பேரூராட்சி மூலம் தீர்மனம் நிறைவேற்றப்பட்டு வென்கல சிலை அமைக்கப்பட்டபோது மாவட்ட வருவாய் துறை மூலம் உரிய அனுமதி இல்லாமல் சிலை வைத்ததாக கூறி சிலையை கைப்பற்றி பேரூராட்சியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு மூலம் சிலை அமைக்க கடந்த பத்து ஆண்டுகளாக அனுமதி கேட்டும் இதுவரையிலும் அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரிக்க வரும் அரசியல் பிரமுகர்கள் ஓட்டு வாங்க அம்பேத்கர் சிலையை நாங்கள் அமைத்து தருகிறோம் என கூறிவிட்டு செல்வதாகவும் அதன் பின்னர் யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும் இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கும் வரை வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்துள்ள சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.