”தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் சட்டப்பேரவையில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொள்கிறார்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதற்கு ஆளும் கட்சியினர் பதில் அளித்து வருகின்றனர். அப்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை திமுக கூட்டணியில் அதுவும் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பண்ருட்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக சட்டப்பேரவையில் அறியப்படும் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்) செயல்பாடு ஆளும் கட்சிக்கு அதிருப்தியை அளித்துள்ளது. மேலும், இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக கண்டித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சட்டப்பேரவையில், சாதிவாரி கணக்கெடுப்பு விவாதத்தின் போது வேல்முருகன் ஆவேசமாகி பேரவையில் ஆளுநர் செல்லும் பாதையில் சபாநாயகரை நோக்கி நடந்துவந்து கோஷமிட்டதாவும், அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே நடத்துகின்றன. ஆனால், தமிழக அரசு ஏன் நடத்தவில்லை என வேல்முருகன் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
வேல்முருகன் செய்கையை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார். அவர் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரபரப்பு குற்றசாட்டை வைத்தார். இதனை அடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் யார் மீது இவ்வாறு புகார் அளித்தது இல்லை. இனி இதுபோல நடந்துகொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று மற்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்தார்.