செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணி முதல் 500 கனஅடி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வருவதாலும், சென்னைக்கு கனமழை எச்சரிக்கையாக விடப்பட்டிருப்பதாலும் உபரிநீர் திறப்பு காலை 10 மணி அளவில் 500 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது.

கூடுதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் குன்றத்தூர், சிறுகளத்தூர், காவனூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாய் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


