எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. இந்த பணிகள் காரணமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம் உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். இதனைத் தொடர்ந்து சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திருநங்கை நலவாரியத்தில் 60 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. இதில் சுமார் 1000 பேர் மட்டுமே கடந்த தேர்தலில் வாக்களித்தனர்.

ஆனால் தற்போது இந்த எஸ்ஐஆர் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வாக்களிக்கும் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது. திருநங்கைகள் பலருக்கு நிரந்தரமான இருப்பிடம் இல்லை. எங்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க நாங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பிறப்பில் திருநங்கைகளுக்கு வேறு பெயரும், திருநங்கையாக மாறி பிறகு வேறு பெயரும் இருக்கும். பழைய பெயரை வெளியே சொல்ல திருநங்கைகள் விரும்ப மாட்டார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பழைய பெயரை கூறி அழைத்தால் திருநங்கைகள் மனதளவில் பாதிப்பு அடைவார்கள். இது தொடர்பாகவும் எனது கருத்துகளை தெரிவித்து உள்ளேன்.
திருநங்கைகளுக்கு நிலையான வீடு இருக்காது. வீடு மாறிகொண்டே இருப்பதால் அவர்களின் பெயர் நீக்கபட வாய்ப்பு உள்ளது. அப்பா பெயர் கேட்கிறார்கள். நிறைய திருநங்கைகள் இளம் வயதில் வீட்டை வீடு வெளியேறி இருப்பார்கள். அப்பாவின் வாக்காளர் அடையாள அட்டை பலரிடம் இருக்காது. எனக்கும் ஆதார் அட்டையில் ஒரு முகவரி உள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் வேறு முகவரி உள்ளது. எனவே எஸ்.ஐ.ஆர் மூலமாக எனது ஜனநாயக கடமையை ஆற்ற முடியால் போய் விடுமோ என்று அச்சமாக உள்ளது.


