Homeசெய்திகள்தமிழ்நாடுதிடீரென ரத்து செய்யப்பட்ட விவாதம்.. நள்ளிரவில் வந்த போன் கால்.. நெறியாளர் விஜயன் வழக்கில் நடந்தது...

திடீரென ரத்து செய்யப்பட்ட விவாதம்.. நள்ளிரவில் வந்த போன் கால்.. நெறியாளர் விஜயன் வழக்கில் நடந்தது இதுதான்!

-

- Advertisement -

​தமிழகத் தொலைக்காட்சிகளில் நடுநிலையான விவாத நெறியாளராகவும், கண்ணியமிக்க ஊடகவியலாளராகவும் அறியப்படுபவர் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நெறியாளர் விஜயன். அண்மையில், அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு என்பவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சாட்சியாக விசாரிக்கப்பட்ட ஊடகவியலாளர் விஜயன் மீது தமிழகக் காவல் துறை நடத்தியுள்ள ஆளுமைச் சிதைவும் மனித உரிமை மீறலும் ஊடகத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திடீரென ரத்து செய்யப்பட்ட விவாதம்.. நள்ளிரவில் வந்த போன் கால்.. நெறியாளர் விஜயன் வழக்கில் நடந்தது இதுதான்!

​அரசியல் கருத்துக்கணிப்புகளை நடத்தி வந்த திருநாவுக்கரசு, பல்வேறு தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பங்கேற்பது போல ‘புதிய தலைமுறை’ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த தொழில்முறை நட்பின் அடிப்படையில், விஜயனின் வாட்ஸப் எண்ணிற்கு அவ்வப்போது சில அரசியல் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். ​ஒருநாள், “தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைக் கவிழ்க்க வேலைகள் நடக்கின்றன” என்ற தகவலை விஜயனுக்கு அனுப்பியுள்ளார். ஒரு செய்தியாளராக “அப்படியா, என்ன நடக்கிறது?” என்று விஜயன் கேட்க, அந்தத் தகவலை அன்றைய தினமே தங்களது செய்திப் பிரிவின் கலந்தாலோசனைக் கூட்டத்திலும் பகிர்ந்துள்ளார். அரசியல் தளத்தில் பரவலாகப் பேசப்படும் ஒரு விஷயம் என்பதால் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் திருநாவுக்கரசு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

we-r-hiring

​விசாரணை என்ற பெயரில் அத்துமீறல்
​இந்த வழக்கு தொடர்பாக விஜயனை சாட்சியாக விசாரிக்கக் கோரி காவல் துறை சம்மன் அனுப்பியது. சட்டத்திற்கு மதிப்பளித்து, தனது இரவு நேர விவாத நிகழ்ச்சியைக் கூட ரத்து செய்துவிட்டு, வழக்கறிஞர் மற்றும் அலுவலக நண்பர்களுடன் காவல் நிலையம் சென்றார் விஜயன். திருநாவுக்கரசுடன் நடந்த வாட்ஸப் உரையாடல்கள் அனைத்தையும் காட்டி, நள்ளிரவு 12 மணி வரை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கினார். விசாரணை அதிகாரி “நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம்” எனக் கூறிய பிறகே அவர் கிளம்பினார்.

​சட்டபூர்வமான இந்த விசாரணைக்கு பின்பே காவல் துறையின் அத்துமீறல் அரங்கேறியது
​நள்ளிரவு அழைப்பு:
வீடு திரும்பிக் கொண்டிருந்த விஜயனை மீண்டும் நள்ளிரவில் அழைத்து, அதிகாலை 2 மணி வரை அதே கேள்விகளைக் கேட்டு அலைக்கழித்துள்ளனர்.

​செல்பேசி பறிமுதல்: அவரது அலைபேசியைப் பறித்துக்கொண்டு, மறுநாள் காலை 11 மணிக்கு வருமாறு உத்தரவிட்டனர்.

​காத்திருக்க வைத்தல்: மறுநாள் காலை 11 மணிக்குச் சென்றவரை, இரவு 7 மணி வரை விசாரணை என்ற பெயரில் வெறுமனே உட்கார வைத்துள்ளனர். ​பத்திரிகையாளர் சங்கங்களும் அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த பிறகே விஜயன் விடுவிக்கப்பட்டார்.

​காவல் துறையின் செய்திக்குறிப்பும் அவதூறும்
​விஜயனை விடுவித்த காவல் துறை, “ஆட்சேபகரமான வகையில் குறுந்தகவல் அனுப்பி குற்றச்சதியின்போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார்” என்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. முறையான ஆதாரங்கள் இன்றி, சாட்சியாக அழைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளர் மீது இத்தகைய அசிங்கத்தை வீசுவது கடுமையான மனிதவுரிமைத் தாக்குதலாகும்.

​ஆளுமைச் சிதைவு
ஒரு மனிதரின் சமூக மதிப்பும் கண்ணியமுமே அவரது வாழ்வாதாரம். நுட்பமான மொழியில் எழுதப்பட்ட இந்தச் செய்திக்குறிப்பு, வாசிப்பவரை எந்த எல்லைக்கும் கற்பனை செய்யத் தூண்டும் ஒரு கூர்மொழித் தாக்குதலாகும். ​ஆட்சேபகரமான குறுந்தகவலா? “ஆட்சி கவிழ்கிறது” என்பது ஆளும் கட்சி அமைச்சர்கள் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை நாளும் பேசும் ஒரு அரசியல் விவாதப் பொருள். இதை ஏதோ யாருக்கும் தெரியாத ரகசியம் போலச் சித்திரிப்பது வேடிக்கையானது.

ஊடகச் சுதந்திரத்தின் பாலபாடம்: பத்திரிகையாளர்கள் குற்றவாளிகளுடனும் பேச நேரிடலாம், அதிகாரிகளுடனும் பேச நேரிடலாம். மேலும், இந்த உரையாடல் நடந்த காலகட்டத்தில் திருநாவுக்கரசு எந்தவொரு குற்றப் பின்னணியும் கொண்டவராக அறியப்படவில்லை. அப்படியிருக்க, ‘குற்றச்சதியின்போது தொடர்பில் இருந்தார்’ எனக் பழிசுமத்துவது அராஜகமானது.

​ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
​இது விஜயன் என்ற தனிநபர் சார்ந்த விவகாரம் மட்டுமல்ல; ஊடகச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை மற்றும் தனிமனித கண்ணியத்தின் மீதான தாக்குதல். சாட்சிகளைப் பயமுறுத்துவதன் மூலம் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு ‘சுய தணிக்கை’ (Self-censorship) முறையைத் திணிக்க காவல் துறை முயல்கிறது. ​தென்னகத்திலேயே அதிக காவல் மரணங்கள், என்கவுன்டர்கள் மற்றும் கருத்துரிமையை ஒடுக்க குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துதல் போன்ற எதிர்மறையான சித்திரங்கள் தமிழகக் காவல் துறை மீது அகில இந்திய அளவில் உருவாகி வருவது கவலைக்குரியது. இது ஒட்டுமொத்த அரசின் மதிப்பையும் சீர்குலைக்கும். ​சட்டத்திற்கு எவரும் மேலானவர்கள் அல்ல; தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், சாட்சியாக வந்தவரை குற்றவாளி போல் சித்திரிக்கும் காவல் துறையின் இந்த நடத்தைசார் வன்முறை கண்டிக்கத்தக்கது. காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் மற்றும் உயர் அதிகாரிகள், காவல் துறையை மறுசீரமைக்கவும், இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.

புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!

MUST READ