அடங்க மறு… அத்துமீறு… என்று பேசும் சிலர் வட தமிழகத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கி வருகின்றனர். பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு உயிரிழந்த தமிழரசன் உடலை பார்வையிட்ட பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி..
ராணிப்பேட்டை மாவட்டம் நெல்வாய் கிராமத்தில் ஒரு கும்பலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர் தமிழரசன் உயிரிழந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தமிழரசனுடைய உடலை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு, தமிழரசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடந்த வாரம் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் இரண்டு பாமக தொண்டர்களை வன்முறைக் கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளதாக கூறினார்.
அதில் தமிழரசன் , விநாயக கணபதி என இருவர் உயிருக்கு போராடும் நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்கப்பட்டனர் என்றும் 21 வயது இளைஞரான தமிழரசன் நேற்று இறந்ததை தொடர்ந்து, பா.ம.க.வினர் சோகத்தில் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்தார்.
பெட்ரோல் ஊற்றி கொளுதி கொலை செய்ததற்காக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இது தனிப்பட்ட விரோதத்தால் நடந்த சம்பவம் இல்லை என்றும் கூறிய அவர், கடந்த சில மாதமாக வட தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்றார்.
சில தலைவர்கள் தூண்டுதலால் இதுபோன்ற வன்முறை நடக்கிறது என அன்புமணி குற்றஞ்சாட்டினர். இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி படித்து முன்னேறுங்கள் என இளைஞர்களுக்கு பா.ம.க.வினர் அறிவுரை சொல்லும் நிலையில் அத்து மீறு-அடங்க மறு, திமிரி எழு- திருப்பி அடி என்று சொல்லும் சில தலைவர்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.கைதான 6 பேரில் ஒருவர் விசிக உறுப்பினர் என்றும் மற்ற 5 பேர் விசிக ஆதரவாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கஞ்சா விற்பது அந்த இளைஞர்களின் தொழிலாக உள்ளதென குறறஞ்சாட்டிய அன்புமணி, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர்தான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இறந்த தமிழரசனின் தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன் தலையில் அடித்து சிலரால் கொல்லப்பட்டார் என தெரிவித்த அவர்,இறந்த தமிழரசன் குடும்பத்திற்கு முதலமைச்சர் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி , தமிழரசன் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.தேர்தல் நெருங்கினாலே 2 சமூகத்தையும் அடித்துக்கொள்ள வைத்து வாக்கு வாங்குவதுதான் திராவிட மாடலின் தேர்தல் யுக்தியா? வினவிய அன்புமணி தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமான 2 சமுதாயமும் வளர்ச்சி அடையாமல் பாதாளத்தில் உள்ளதன என்று கூறியுள்ளார்.