அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதே சமயம் அமலாக்கத்துறை சார்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 13- ஆம் தேதி அன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு, உடல்நலம் தேறியதை அடுத்து புழல் சிரைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே சட்டவிரோதமாக செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததாக அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும், அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதியளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.