இந்தியாவின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு சமரசம் செய்து கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.
இந்தியாவின் நீண்ட காலமாக பின்பற்றப்பட்ட தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் இருந்து ஒன்றிய பாஜக அரசு சமரசம் செய்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா். சர்வதேச அரங்கில் இந்தியாவின் மரியாதை, தேசிய நலன், இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதாக வெளியான தகவளை குறிப்பிட்ட அவர், இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி ஏன் தேவை என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளாா். இது இந்தியாவின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கைக்கு முரணானதாகும் எனக் கூறினார்.
மேலும், ஈரானின் IRIS DEENA போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கியதற்கு இந்தியா கருத்து தெரிவிக்காதது பெரும் கண்டனத்துக்குறியது என்று சாடியுள்ளாா். இந்தியா நடத்திய சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்க வந்த ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தியாவுக்கு வந்திருந்த ஈரான் போர்க்கப்பல் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசு எப்படி மவுனமாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் முதல்வர் எழுப்பியுள்ளாா். சர்வதேச உறவுகளில் இந்தியாவின் மரியாதை மற்றும் இறையாண்மை காக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.


