முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய பயனாளர்கள் இணைய ஏதுவாக இன்று, 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2009 ஆண்டு தொடங்கப்பட்ட முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திட்டமாகும். பின்னாளில் இந்தத் திட்டமானது மத்திய அரசின் பிரமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பெறும் மக்களும் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் பெறலாம். அந்தவகையில் தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 1.45 கோடி குடும்பங்கள் காப்பீட்டு திட்ட அட்டை பெற்றுள்ளன.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ், பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகள், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகள் மற்றும் 52 பரிசோதனை முறைககளை கட்டண்மின்றி பெற்றுகொள்ளலாம். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் புதிய பயனர்களை சேர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் காப்பீடு முகாமும் நடைபெறும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதாவது புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் ஆகியோரும் இத்திட்டத்தில் சேர ஏதுவாக, சென்னையில், அடையாறு, மயிலாப்பூர், நீலாங்கரை உட்பட தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று (டிசம்பர் 2) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த காப்பீடு முகாமில் , புதிதாக இணைய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.