பாஜகவினரால் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்- மாணிக்கம் தாகூர்
செந்தில் பாலாஜியை பற்றி பேசுவதற்கு முன்பு கண்ணாடியை அண்ணாமலை ஒருமுறை பார்க்க வேண்டும் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரெட்ரப்பட்டி கிராமத்தில், பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 7.5 லட்சம் செலவில் நாடகமேடையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து , சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்தார் .மேலும் சிலார்பட்டி, சின்ன முத்துலிங்காபுரம், செங்குளம் ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் பணிகள் குறித்து கேட்டிருந்தார். அப்போது பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு வருகிற 15ஆம் தேதி முதல் தமிழக அரசு மகளிர் உரிமை தொகை வழங்க உள்ளது. இதேபோல் ராகுல் காந்தி பிரதமராக வந்த பின் மத்திய அரசு சார்பில் ரூபாய் 5000 வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி மாணிக்கம் தாகூர், “செந்தில் பாலாஜியைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை. ஹரியானாவில் பெண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பாஜக அண்ணாமலை, செந்தில் பாலாஜியைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர், அவரைப் பற்றி பேசுவதற்கு முன் அண்ணாமலை கண்ணாடியை ஒருமுறை பார்த்து பேச வேண்டும். பாஜகவினரால் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி காங்கிரஸ், எனவே அனைத்து மதங்களுக்கும் உரிய மரியாதை கொடுப்போம்” என தெரிவித்தார்.