spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

-

- Advertisement -

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகளை  மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுசெய்தார். தற்போதைய நிலவரப்படி எந்தெந்த பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது, நிவாரண முகாம்கள் செயல்படும் விதம், கட்டுப்பாட்டு அறைக்கு வருகிற அழைப்புகளின் விவரம் உள்ளிட்டவை குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். புயல் கரையை கடக்கும்போதும், அதற்கு பின்னரும் தொடர்ந்து கண்காணித்து, மக்களை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

we-r-hiring

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :- எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. சென்னையில் காலை 7 மணி முதல் தற்போது வரை சராசரி 110 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போர்க்கால அடிப்படையில் 1,700 மழைநீர் அகற்றும் மோட்டார் பம்புகள் வைத்து மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழையால் விழுந்த 27 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டது. இதற்காக 500 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

21 சுரங்கப் பாதையில் 6 சுரங்கப்பாதை தவிர அனைத்தும் சீரான முறையில் இயங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட 6 சுரங்க பாதைகளிலும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு வழங்குவதற்கு 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது. இதுவரை 2,32,200 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவின் படி சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்கும் வசதிக்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது.

சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22,000 பேர் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி உடன் தன்னார்வாளர்கள் அதிகப்படியாக உதவி மேற்கொண்டும் வருகின்றனர். மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் தொண்டர்கள் என அனைவரும் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் தலைமையிலான அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. புயல் இன்று இரவு புயல் கரையை கடக்கும் நிலையில் எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் யாரும் அச்சமும் பதற்றம் அடைய வேண்டாம். தமிழக அரசுடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டு பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவோம்

MUST READ