Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம் தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம் தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -
kadalkanni

திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘என் உயிரினும் மேலான’ – இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது, நான் அளவில்லாத வகையில் பெருமை அடைந்திருக்கிறேன்! இந்தப் பேச்சு போட்டி, மூன்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற போட்டி மட்டும் அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தியலை, அடுத்த நூற்றாண்டுக்குத் தூக்கிச் சுமந்து செல்லவிருக்கும் பேச்சுப் போராளிகளைக் கண்டறிந்து, பட்டை தீட்டும் பயிற்சிப் பட்டறை! அப்படிப்பட்ட பட்டறையை, நான் கட்டியெழுப்பிய இளைஞரணி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான், என் பெருமைக்குக் காரணம்!

“திமுக என்பதே, பேசிப் பேசி வளர்ந்த கழகம்! அந்தக் காலத்தில், பேசிப் பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம்” என்று நம்முடைய இயக்கத்தைப் பற்றிச் சொல்லுவார்கள். ஆனால், அவர்கள் சொல்ல மறந்தது, இல்லை – சொல்லாமல் தவிர்ப்பது என்னவென்றால், நாம் பேசிய பேச்செல்லாம் வெறும் அலங்கார அடுக்குமொழி அல்ல, உலகம் முழுவதும் நடந்த புரட்சி வரலாறுகளைப் பேசினோம்; உலக அறிஞர்களின் வரலாற்றைப் பேசினோம்; நம் நாட்டில் நடைமுறையில் இருந்த கொடுமைகளைப் பேசினோம்; மூடநம்பிக்கை – பிற்போக்குத்தனம் – பெண்ணடிமைத்தனம் – இவைகளுக்கு எதிராகப் பேசினோம்.

பேச்சுக்கலை மிக மிக வீரியமிக்கது! சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது! “சொல்வன்மை மிக்கவனை வெல்வது அரிது” என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட சொல்வன்மைமிக்க படைக்கலன்களை உருவாக்க வேண்டும் என்றுதான், இந்த ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப் போட்டியை நடத்தும் பொறுப்பை – இளைஞர் அணியிடம் நான் ஒப்படைத்தேன்.

அப்படித்தான், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை தம்பி உதயநிதி-யிடம் நான் ஒப்படைத்தேன். இளைஞரணிச் செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து, அவர் செயல்பட்டு வருகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், என்னைப் பொருத்தவரையில், அந்த பொறுப்பு நான் அவருக்கு கொடுத்த பயிற்சி! அப்படி பார்க்கும்போது, நான் வைக்கும் ஒவ்வொரு ‘டெஸ்ட்’-லயும் அவர் ‘செண்ட்டம் ஸ்கோர்’ எடுக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ