வழக்கறிஞர்கள் அவதூறு பேச்சு- பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி தரப்புக்கு ஆஜரான வழக்கறிஞரை அவரது கணவர் ஆபாச வார்த்தை கூறி தாக்க முயன்றதாக குற்றம் சாட்டியும் உடனடியாக வழக்கறிஞரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத திருக்கோகர்ணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் சங்கத்தினர் இரண்டு தினங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவை வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சங்கீதா பணியிடம் மாற்றம் செய்யப்படுவார் என்று மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டதாக கூறி வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக வழக்கறிஞர்களின் அவதூறு பேச்சுக்களால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா காவல் நிலையத்தில் உள்ள பதிவேட்டில் தனது தற்கொலைக்கு வழக்கறிஞர்களின் அவதூறு பேச்சு தான் காரணம், தனக்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்று எழுதி வைத்துவிட்டு 15 தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்று தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.