தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரம் போதுமான அளவில் இல்லாத நிலையில், பயிரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், வேறுவழியின்றியும் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் விவசாயிகளிடம், யூரியாவுடன் மற்ற உரங்களையும் சேர்த்து வாங்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
காவிரி டெல்டா உட்பட நடப்பாண்டுக்கான தமிழகத்தின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பளவைக் கணக்கீட்டு அதற்குத் தேவையான உரங்களை போதுமான அளவிற்கு முன்கூட்டியே இருப்பு வைக்கத் தவறியதே தற்போதைய உரத்தட்டுப்பாட்டிற்கு காரணம் என பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் உடனடியாக விநியோகிக்கப்படுவதையும், தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்“ என அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாா்.
கோவையில் தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் – கிராம மக்களே விரட்டியடித்தனா்



