தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் விதமாக தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் ராஜாராமன் அனைத்து துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளார்.
அதில், தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் என்றும் அரசுப்பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, தலைமை செயலகத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை, தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக, தமிழ்வளர்ச்சி துறையின் மொழி பெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.