ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என சரத்குமார் தெரிவித்துள்ளாா்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பதவி ஏதும் வழங்கப்படவில்லை என்று நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாா். இந்த நிலையில் இது தொடர்பான கடிதத்தை சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் அவரை, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் சந்தித்து வேண்டுகோள் கடிதம் வழங்கினார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் பேசியதாவது, ”நேற்று நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையில் தங்களது வேண்டுகோளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தற்போது கடிதமாக கொடுத்துள்ளோம் என்றாா். மேலும், பியூஸ் கோயல் விமான நிலையத்திற்கு வருவதற்காக இவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் இது தொடர்பாக கலந்து பேசுவோம் என நயினார் கூறியதாக தெரிவித்தாா்.
இன்று பியூஸ் கோயலை சந்திக்கின்றீர்களா என்ற கேள்விக்கு, தான் கோயம்புத்தூர் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அழைப்பு வந்தால் கோயலைச் சந்திக்கத் தயார் என்றும் சரத்குமார் குறிப்பிட்டார்.

தற்போது கடிதம் கொடுத்தீர்கள் திருப்தியோட இருக்கின்றீர்களா என்ற கேள்விக்கு, கடிதம் வழங்கியதன் பின்னர் திருப்தியுடன் இருப்பதாகவும், இந்த விவகாரத்திற்கு நல்ல முடிவு வரும் என்று “நம்பிக்கை உள்ளது என சரத்குமார் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
