கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாமக, பாஜக மனு தாக்கல் செய்தது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரிக்க தமிழக அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர் வாதிடும் போது, “கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி டி.எஸ்.பி., தலைமையில், 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 244 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மதுரையில் உள்ள 2 நுழைவு வாயில்களை இடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மேலும், “புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. என்ன மாதிரியான விசாரணை நடந்துள்ளது எனத் தெரியாமல் விசாரணையை எப்படி சிபிஐ-க்கு மாற்ற முடியும்” என அரசு தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிசிஐடி தரப்பு தெரிவித்துள்ளது. விஷச் சாராய மரண வழக்கில் ஜாமின் கோரி சடையன், வேலு, கவுதம் ஜெயின் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர். வேலு, கவுதம் ஜெயின் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் வாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.