Homeசெய்திகள்தமிழ்நாடுதவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது - மு.வீரபாண்டியன் கருத்து

தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது – மு.வீரபாண்டியன் கருத்து

-

- Advertisement -

தவெக அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக அளிக்கும் ஆதரவே போதுமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.தவெகவுக்கு இடதுசாரிகள், விசிக ஆதரவே போதுமானது: மு.வீரபாண்டியன் கருத்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தாா் அப்போது பேசிய அவர், ”அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற முதலமைச்சர் விஜய்யின் கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேசபக்தி பாடல்களுக்கு தமிழகம் எதிரானது அல்ல என்றும், அதே நேரத்தில் தாய்மொழிக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

we-r-hiring

மேகேதாது அணை திட்டம் குறித்து பேசிய அவர், தமிழகத்தைச் சேர்ந்த தென் மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல் எந்த திட்டத்தையும் முன்னெடுக்கக் கூடாது என்றார். அதேபோல், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது ஏற்க முடியாதது என்றும், மத்திய அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரத்தில், போராடி பெற்ற மாநில உரிமையை தமிழக அரசு விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், இதில் முதலமைச்சர் விஜய் உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

கீழடி ஆய்வு குறித்து பேசிய அவர், அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்த ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், கீழடி அகழாய்வு பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது மத்திய அரசின் கடமை என்றும் தெரிவித்தார். கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டிய அவர், பாஜகவில் இணைந்தவர்கள் மீது உள்ள வழக்குகள் அமைதியாகிவிடுகின்றன என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார். மேலும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைவதை விமர்சித்த அவர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறுவது அரசியல் நெறிமுறைகளுக்கு முரணானது என்றார். தவெகவுக்கு இடதுசாரிகள் மற்றும் விசிக வழங்கும் ஆதரவே போதுமானது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறிய “தவெக ஆட்சி ஐந்தாண்டு நீடிக்காது” என்ற கருத்து குறித்து பதிலளித்த அவர், மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்துள்ள நிலையில், தவெக அரசு முழு காலமும் நீடித்து நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றார். அதேசமயம், முந்தைய ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமைச்சர் பதவி அல்லது வாரியத் தலைவர் பதவி போன்றவற்றை இடதுசாரிகள் கோரவில்லை என்றும், தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமே போராடுவோம் என்றும் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு…

MUST READ